சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? வைகோ விளக்கம்

vaikoசட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? என்பது தொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளரும் மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது. கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராகப் போட்டியிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சமூகங்களுக்கு இடையில் பகையையும், வெறுப்பையும் நெருப்பாக மூட்டி, அதன் வெப்பத்தில் குளிர் காய்ந்து தங்களை நிலைப்படுத்திக் கொள்ளத் தமிழ்நாட்டின் பல இடங்களில் பலர் முயல்கிறார்கள்.

நாம் 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றோம். வளரும் பிள்ளைகளிடம், பிஞ்சு உள்ளங்களில் கல்லூரி மாணவர்கள் இடையே, சாதி வெறி எனும் ஆலகால விஷம் திணிக்கப்படுகிறது.

தங்கள் சுயநலத்திற்காக, அரசியல் லாப வேட்டைக்காக, தங்களை அரசியல் தலைவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக, 1980க்குப்பின்னர் தீவிரமாகப் புறப்பட்டுள்ள சிலர், தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்திற்கே உலை வைக்கும் கொள்ளிக் கட்டைகளைத் தூக்கித் திரிகிறார்கள்.

நான் போட்டியிடுவதாக அறிவித்த கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர், தான் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்; எங்களுக்கு 70000 வாக்குகள் இருக்கின்றன; வைகோ சார்ந்துள்ள சமுதாயத்திற்கு 52000 வாக்குகள்தான் உள்ளன; அதையும் போட்டி போடும் வேட்பாளர்கள் பிரித்துக் கொள்வார்கள். அதனால் நான்தான் வெற்றி பெறுவேன் என்று கூறுகிறார். இதைக் கண்டித்துத் தி.மு.க. தலைமை எந்த அறிக்கையும் தரவில்லை.

அறிவாசான் தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கர் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கா இந்தக் கதி?

கோவில்பட்டி பிரச்சாரத்தில் என் முதல் நிகழ்ச்சியே வடக்கு திட்டங்குளம்தான். அந்த ஊருக்குச் செல்லும்போதெல்லாம் நான் பசும்பொன் தேவரின் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். அப்போதெல்லாம் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாகத் திரண்டு என்னை வரவேற்பார்கள்.

ஆனால், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் என்னை மையப்படுத்தி சாதி வேற்றுமையையும், சாதி மோதலையும் ஏற்படுத்த தி.மு.க. திட்டமிட்டு இருப்பது, ஆதாரபூர்வமாக எனக்குத் தெரிய வந்துள்ளது. அதனால்தான், நேற்றைய தினம் திட்டங்குளத்தில் தி.மு.க.வினர் சிலர் தேவர் சிலையை நெருங்க விடாமல் கலவரம் செய்ய முனைந்தார்கள். நண்பகல் இரண்டு மணியில் இருந்தே முழு மது போதையில், சாதியைக் குறித்து என்னை வசைபாடிக் கொண்டே இருந்துள்ளனர்.

சாதியைக் குறித்தும், கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர் உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்டதற்கு நான் கண்டனம் தெரிவித்ததையும், மருத்துவமனையில் கௌசல்யாவுக்கு நான் ஆறுதல் சொன்னதையும் குறிப்பிட்டு, தொடர்ந்து வெறிக் கூச்சல் போட்டுள்ளனர்.

எனது கோவில்பட்டி தொகுதிப் பிரச்சாரத்தின் முதல் நிகழ்ச்சியில் தேவர் சிலைக்கு மாலை போட விடாமல் தடுத்து விட்டால், வைகோவை ஊர் மக்கள் விரட்டி அடித்தார்கள் என்று அனைத்து ஏடுகளிலும் செய்தி போடுவார்கள்; அதுதான் அவர்களது நோக்கம் என்பதை உணர்ந்துதான், தேவர் சிலைக்கு மாலை போட வருகிறேன்; எத்தனை பேர் அரிவாளோடு வருகிறீர்கள்? தேவர் சிலைக்கு மாலை போடாமல் இந்த ஊரை விட்டுப் போக மாட்டேன் என்று கூறி, என் காலணிகளை வேனிலேயே கழற்றி வைத்து விட்டு, கலகம் வரும் என எதிர்பார்த்து, கருப்பு சால்வையையும் வேனில் போட்டு விட்டு, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சிலையை நோக்கிச் சென்றேன். இதன்பிறகுதான், காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

எனக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, இந்தத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் என்னை மையமாக வைத்து, தேவர் – நாயக்கர் சாதிக்கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க, தலைமையைத் தற்போது இயக்கிக் கொண்டு இருப்பவர் திட்டமிட்டு இருப்பதும், அந்த யோசனையை தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஊக்குவித்ததையும் நான் அறிய நேர்ந்தது. கோவில்பட்டி தொகுதி முழுவதும் கலவரம் நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றார்கள் என்பதையும் அறிந்தேன்.

என்னைக் குறிவைத்துச் சாதி மோதல் ஏற்படுவதையும், இரத்தக்களறி ஆக்க முனைவதையும் நினைத்துப் பார்க்கவே மனம் வேதனையில் துடிக்கின்றது.

சாதி வெறியும், சாதிய ஆணவமும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்கி விடும் என நான் உணர்வதால், அந்த அபாயகரமான சீர்கேட்டைத் தடுக்கவும், தமிழ்நாட்டின் ஜீவாதார, நீராதார நிலைகளையும் காக்கவும், நான் பிறந்த பொன்னாடாகிய தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்வுக்குப் பாடுபடவும், புற்று நோயாகி வரும் ஊழலை அறவே ஒழிக்கவும், மதுக்கொடுமையில் இருந்து தமிழ்நாட்டை மீட்கவும், தரணியெங்கும் வாழும் தமிழர்களின் நலனைக் காக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிக்கவும் எஞ்சிய என் வாழ்நாளை அர்ப்பணிப்பது என முடிவு செய்துள்ளேன்.

ஐவரின் தியாகத் தணலில் உதயமான மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை எவரும் நெருங்க முடியாத எஃகுக் கோட்டையாக நிர்மாணிப்பேன்.

திராவிட இயக்கத்தில் ஒளி வீசுகின்ற தந்தை பெரியாரின் சுயமரியாதையுடன், அண்ணாவின் இலட்சியக் கனவுகளை நனவாக்கி வெற்றி பெறுவேன் என்று என் நெஞ்சுக்குள் தவம் செய்து, சபதம் பூண்டுள்ளேன்.

இந்தப் பின்னணியில், 2016 மே 16 இல் நடைபெற இருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், நான் போட்டியிடுவது இல்லை என்றும், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளராக விநாயகா ரமேஷ் பெயரை அறிவிக்கிறேன்.

எமது அணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி, நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க, பசி நோக்காது, கண் துஞ்சாது, மெய் வருத்தம் பாராது நான் பாடுபடுவேன்.

தொண்டர்கள் எனது முடிவை ஏற்றுக்கொண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தோழமைக் கட்சித் தலைவர்கள் நம்மைப் பாராட்டும் வகையில் பணியாற்றிட வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வைகோவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்து தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply