ஜெயலலிதா பற்றி விமர்சனம் தனிப்பட்ட முறையில் பாதித்து இருந்தால் வருந்துகிறேன்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு, தமிழக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி. ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், மாநில செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
முகுல் வாஸ்னிக் பேசும்போது, “காங்கிரஸ் ஆட்சி தந்த ஒளிமயமான காலத்தை திரும்ப கொண்டுவர பாடுபட வேண்டும். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கான உறுதிமொழிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவதால் காங்கிரஸ் கட்சி மேலும் வலுவடைந்து வருகிறது” என்றார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது, “பிரிந்து சென்ற குடும்ப உறவுகள் மீண்டும் தாய் வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி இழந்த பெருமையை மீட்டெடுப்பதற்கு தமிழக சட்டசபை தேர்தல் ஒரு வாய்ப்பு. தமிழகத்தில் ஆட்சி செய்யும் பிரமாண்ட அந்தஸ்தை மீண்டும் பெற கடுமையாக உழைக்கவேண்டும். எங்களுடைய தேர்தல் அறிக்கை விவசாயிகள், தொழிலாளர்கள், படித்த இளைஞர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கியது” என்றார்.
இதையடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்பட அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சோனியா-ராகுல் காந்தி எப்போது தமிழகம் வருகிறார்கள்?
பதில்:- மே மாதம் முதல் வாரம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி தமிழகம் வருகிறார். அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளார். அனேகமாக அந்த பிரசார கூட்டம் சென்னையில் நடைபெறலாம். இதேபோல காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் ராகுல்காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகத்துக்கு வர உள்ளார். தேதி முடிவாகிவிட்டதும் விரைவில் அறிவிக்கப்படும்.
கேள்வி:- திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி பேசிய பேச்சை தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளார்களே. இதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
பதில்:- நான் அங்கு பேசியது யானைகளிடமும், மிருகங்களிடமும் காட்டும் அக்கறையை பாதிக்கப்பட்ட மக்களிடம் ஜெயலலிதா காட்டவில்லை என்றுதான்.
நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதா? அல்லது வேண்டும் என்று என் மீது குற்றம் சாட்டுவதற்காகவா? என்று தெரியவில்லை. சரி என்னுடைய பேச்சு தனிப்பட்ட முறையில் யாரையும் பாதித்திருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் பற்றி நான் அவதூறாக எதுவும் பேசவில்லை. ஏன் எனது கொடும்பாவியை எரிக்கிறார்கள்? என தெரியவில்லை. எரித்தால் எரித்துவிட்டு போகட்டும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.பெண் தலைவர்களை வக்கிர எண்ணத்துடன் நான் பேசுவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். அவருக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் அவதூறாக பேசவில்லை. அவர்களே கற்பனை செய்து கொண்டு பேசினால் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
தேர்தலில் வைகோ போட்டியிடுவதும், போட்டியிடாததும் அவரது தனிப்பட்ட விருப்பம். தி.மு.க.வால்தான் போட்டியிடவில்லை என்று கூறும் அவர், அரசியலில் இல்லாமல் போனாலும் அதற்கும் தி.மு.க.தான் காரணம் என்று கூட சொல்லக்கூடிய நிலையில் தான் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply