மஹிந்த, ஜீ. எல். பீரிஸ் மீது விசாரணைகள் வேண்டும்
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வதற்கு சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளும் விசாரணைப் பிரிவினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இருவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. நளின் பண்டார நேற்று தெரிவித்தார்.
சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போது மேற்படி குறிப்பிட்ட நளின் பண்டார எம்.பி. தீவிர குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
“மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளரான நொயெல் ரணவீரவின் மரணத்தின் சந்தேக நபராகவும் ஆயுதக் கொள்வனவு விவகாரம் தொடர்பிலும் உதயங்க வீரதுங்க தேடப்பட்டு வருகின்றார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் இவர் இலங்கைக்கு வராமல் எங்கோ தலைமறைவாகியிருக்கிறார்.
தமக்கு தேவையானோருடன் இவர் மின்னஞ்சல் மூலமாகவே தொடர்பினை ஏற்படுத்தி வருகின்றார்” என்றும் நளின் பண்டார எம்.பி. தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்துக்கு விஜயம் செய்தபோது வீரதுங்கவை சந்தித்துள்ளார். இதுதான் வீரதுங்கவின் தற்போதைய இருப்பிடத்தை கண்டறிவதற்கான சிறந்த ஆதாரமாகும்.
எனவேதான் தாய்லாந்து பயணத்தில் பங்கெடுத்தவர்களை விசாரணைக்குட்படுத்துமாறு தான் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ராஜபக்ஷவின் பாதுகாப்புடன் உதயங்க வீரதுங்க தலைமறைவாகியிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில் எதற்காக அவரை கண்டுபிடிக்க இன்டர்போலின் உதவியை நாடக்கூடாது என்றும் நளின் பண்டார எம்.பி. கேள்வி எழுப்பினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply