கண்டியைச் சேர்ந்த குடும்பப்பெண் வத்தளையில் வைத்து கடத்தல்
கண்டி தெல்தோட்டையைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் வத்தளை மாபோல பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் நேற்று கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தேவமனோகரன் புஷ்பராணி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பெண்ணின் கணவர் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண் தொழில் புரியும் நிறுவனத்திற்கு சென்ற யுவதிகள் இருவர் நேற்று பிற்பகல் 1 மணியளவில் அப்பெண்ணை வெளியில் அழைத்துச் சென்று பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் பேசிக் கொண்டிருந்த சமயம் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாதோர் அப்பெண்ணை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடத்தப்பட்டவரான புஷ்பராணியின் கணவர் எஸ். தேவமனோகரன் மத்துகமையைச் சேர்ந்தவராவார். புதிதாக திருமணம் முடித்த இருவரும் தலைநகரில் தொழில் செய்து வருகின்றனர்.
சம்பவதினமான நேற்று நண்பகல் புஸ்பராணி வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்ற யுவதி ஒருவர் அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் பகல் போசன இடைவேளையின்போது மீண்டும் அங்கு வந்த அதேயுவதி நிறுவனத்தின் நுழைவாயிலில் நின்றபடியே புஷ்பராணியை அழைத்துள்ளார். குறித்த யுவதி ஏற்கனவே நிறுவனத்திற்கு வந்து சென்றவர் என்பதால் காவல் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் புஷ்பராணியை சந்திப்பதற்கு அனுமதித்துள்ளார். அதன்போது யுவதியுடன் மற்றுமொரு யுவதியும் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து மூவரும் அருகிலிருந்த பஸ் தரிப்பிட நிலையத்திற்கு சென்று பேசிக் கொண்டிருந்தசமயம் திடீரென முச்சக்கர வண்டியில் அங்கு வந்தவர்கள் புஸ்பராணியை முச்சக்கர வண்டிக்குள் பலவந்தமாக இழுத்து போட்டுக் கொண்டு அங்கிருந்து மாயமாகியுள்ளனர்.
இதனையடுத்து அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் உள்ளிட்டோர் சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸில் முறையிட்டுள்ளதுடன் புஷ்பராணியின் கணவரும் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பில் புஷ்பராணியின் கணவர் தேவமனோகரன் கூறுகையில்,எமக்கு விரோதிகள் என்று எவரும் இல்லை. அத்துடன் நாம் எந்தக் குற்றச் செயல்களுடனும் தொடர்புபடவும் இல்லை.பகல் 1.00 மணியளவில் கடத்தப்பட்ட எனது மனைவி தொடர்பில் இதுவரை (நேற்றிரவு) எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
இதேவேளை மேற்படி கடத்தல் சம்பவம் தொடர்பில் காணாமல் போனோரை கண்டறிவதற்கான மக்கள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டாளரும் எம்.பி.யுமான மனோகணேசன்,. பிரதி அமைச்சர் இராதா கிருஷ்ணன் ஆகியோரது கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply