தேடித் தேடிப் பார்க்கிறேன் 3–வது அணியை காணவில்லை: கருணாநிதி பேட்டி
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:-
கேள்வி:- ஏற்கனவே 12 முறை நீங்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இது 13-வது முறை என்பதால் உங்களது உணர்வு எப்படி இருக்கிறது? நீங்கள் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றால் உங்களுடைய உணர்வு எப்படி இருக்கும்?
பதில்:- நான் முதல்-அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றால், முன்பு என்னென்ன நன்மைகளைத் தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்தேனோ, அவை அனைத்தும் பதிவாகி இருக்கிறது. அந்த நன்மைகளை மீண்டும் செய்வேன்.
மேலும் முற்போக்காகச் செய்வேன். அதுதான் நான் முதலமைச்சராக வந்தவுடன் செயல்படுத்த இருக்கும் செயல் திட்டம். இவை தமிழ்நாட்டு மக்களின் நினைவில் என்றும் இருக்கும்.
கே:- நீங்கள் 14 வயதிலிருந்து கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கிறீர்கள். இந்த அரசியல் வாழ்க்கையில் உங்களுக்கு மனநிறைவு தந்த ஒரு செய்தி எது? மனவருத்தம் தந்த செய்தி பற்றி தெரிவிக்க முடியுமா?
ப:- மனவருத்தத்தைத் தந்தது ஜெயலலிதா ஆட்சியில் என்னை நள்ளிரவில் கைது செய்து கொடுமைப்படுத்தியது. என்னுடைய வீட்டாரை, பிள்ளைகளை, மாறன் போன்ற என்னுடைய உறவினர்களைச் சித்ரவதை செய்தார்களே அது எனக்கு மிக வருத்தம் தந்தது. அது எனக்கு பெரிய மன வருத்தமாகும்.
மன மகிழ்ச்சி தந்த விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. அவை அத்தனையையும் இங்கே சொல்ல இயலாது.
கே:- இந்த அரசாங்கம் ஐந்து ஆண்டுகளாக எந்த விதத்தில் தமிழ் நாட்டு மக்களை தாழ்வு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது?
ப:- ஒரேயொரு விஷயம் போதும்; செம்பரம்பாக்கத்திலே ஏரியை திறந்து விட்டது. அதன் காரணமாக தமிழ்நாட்டு மக்கள்; குறிப்பாகச் சென்னை மக்கள் நூற்றுக்கணக்கில் மடிந்தார்களே, அதற்குக் காரணம் இந்த அரசுதான்.
அதற்காகத்தான் நாங்கள் நீதி விசாரணை கேட்டு வருகிறோம். செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கின்ற அதிகாரத்தைக் கூட முதல்-அமைச்சர் தன் கையிலே எடுத்துக் கொண்டு தவறான முறையிலே தாமதமாக, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட்ட காரணத்தால், நூற்றுக்கணக்கான மக்கள் சாக நேரிட்டது.
கே:- மூன்றாவது அணி அமைந்திருக்கிறதே, அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?
ப:- தேடித்தேடிப் பார்க்கிறேன். அந்த மூன்றாவது அணி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.
கே:- தி.மு.க. சமூக வலை தளங்களில் நீங்கள் நிறைய ஈடுபாடு காட்டி வருகின்றீர்கள். ஆன் லைன், பேஸ்புக்கில் நீங்கள் இருக்கின்றீர்கள். டுவிட்டரிலும் நீங்கள் இருக்கிறீர்கள். அது இளைஞர்கள் மத்தியில் எந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
ப:- இளைஞர்களுக்கு மத்தியில் அது ஏமாற்றத்தை ஏற்படுத்தாத காரணத்தால் தான் புதிய மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் இளைஞர்களுக்கு தெரிந்திருக்கிற காரணத்தால்தான் இளைஞர்களும் தி.மு.க.வை ஒரு வழி காட்டியாக வைத்திருக்கிறார்கள்.
கே:- எதிர்க்கட்சிகள் உங்கள் மீது குற்றஞ்சாட்டும் போது, குடும்ப அரசியல், ஊழல் இதைப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கான பதிலடி என்னவாக இருக்கும்?
ப:- பதிலடி கொடுக்கும் போது நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
கே:- நீங்கள் நாளை முதல்-அமைச்சராக ஆன பிறகு, ஸ்டாலினுக்கு எந்த மாதிரியான ஒரு பங்கு கட்சியிலேயும், ஆட்சியிலேயும் இருக்கும்?
ப:- ஸ்டாலின் நீண்ட காலமாகவே கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். என்னைப் போலவே, அவரும் தொண்டு செய்ய வேண்டும் என்று வந்தவர்தான். தொண்டர்களுக்குக் கிடைக்கின்ற பரிசு, எனக்கும் கிடைக்கும் ஸ்டாலினுக்கும் கிடைக்கும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply