அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை
அமைச்சுக்களின் செயலாளர்கள் அரசாங்கத்தின் கொள்கை, நிலைப்பாடுகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசு தொடர்பிலோ, அமைச்சுக்கள் தொடர்பிலோ அறிக்கைகளை வெளியிடும் போது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த முனையக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளார். அரசுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடிய வகையில் செயலாளர்களோ, அதிகாரிகளோ செயற்படக்கூடாதெனவும் பிரதமர் கடும் தொனியில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரத்தில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே வெளியிட்ட ‘ஒன்றிணைந்த எதிர்க் கட்சி’ குறித்த அறிக்கை தொடர்பில் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயலாளரை அழைத்து விளக்கம் கோரியபோதே இந்த கடுமையான தொனியில் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
அரசின் பிரதான கட்சியான ஐக்கி்ய தேசியக் கட்சியின் தவிசாளர், செயலாளர், ஊடகப் பேச்சாளர் உள்ளிட்டோருடன் வாராந்தம் நடத்தும் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் கட்சியின் உயர் மட்டத்தைச் சேர்ந்த சிலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் விடுத்த அறிக்கை தொடர்பில் விளக்கம் கோரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது போன்ற அறிக்கைகளை சுயவிருப்பின்பிரகாரம் வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
அரசுக்கு அபகீர்த்தியை அல்லது நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் அரச அதிகாரிகள் செயற்படக்கூடாது. இவ்விடயத்தில் கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டிய நிலை உருவாகி இருப்பதாகவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அமைச்சுக்களின் அனைத்துச் செயலாளர்களும், உயரதிகாரிகளும் அரசின் கொள்கைக்கமையவே செயற்பட வேண்டும். அரசின் நிலைப்பாட்டுக்கு முரணாக அவர்கள் செயற்பட முடியாது. ஊடகங்களுக்கோ மற்றும் வேறு சந்தர்ப்பங்களிலோ அறிக்கைகளை வெளியிடும் போது அரசின் கொள்கைக்கமையவே செயற்பட வேண்டும். தமது தனிப்பட்ட கருத்துக்களையோ, சுய நிலைப்பாடுகளையோ அங்கு வெளிப்படுத்த முனையக்கூடாது எனவும் பிரதமர் கடும் தொனியில் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம் அமைச்சுக்கள் தொடர்பில் அறிக்கைகள் விடுக்கப்படுவதற்கு முன்னர் செயலாளர்கள் அல்லது ஊடகச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பெற்றே அவற்றை வெளியிட வேண்டும் சுய விருப்பப்படி எந்த அறிக்கையும் செயலாளர்கள் வெளியிடக்கூடாது எனவும் பிரதமர் இங்கு வலியுறுத்திக் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply