பாகிஸ்தான் உணவகத்தில் மனித உரிமை ஆர்வலர் சுட்டுக் கொலை

gurramபாகிஸ்தானில் மதசகிப்புத்தன்மைக்கு எதிராக குரல் எழுப்பிவந்த பிரபல மனித உரிமை ஆர்வலர் நேற்றிரவு உணவகம் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்குள்ள கராச்சி நகரை சேர்ந்தவர், குர்ரம் ஜகி(40). மனித உரிமை ஆர்வலரான இவர், அனைத்து மதங்களை சேர்ந்த மக்களுக்கான வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி, ’பாகிஸ்தானை கட்டமைப்போம்’ என்ற தலைப்பில் ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை ஆழமாகவும், பலமாகவும் பதிவிட்டு வந்தார்.

மதசுதந்திரம் மற்றும் சகிப்புத்தன்மையை வலியுறுத்துவதற்காக இணையதளம் ஒன்றையும் தொடங்கிய ஜகி, அதன் ஆசிரியர் என்ற முறையில் சிறுபான்மை இனத்தை சார்ந்த பாகிஸ்தானியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தொடர்ந்து எழுதி வந்தார்.

சமீபத்தில், ஷியா பிரிவினருக்கு எதிராக வன்முறையை கிளப்பிவிட்ட பிரபல மதத்தலைவருக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்தியதன் மூலம் லால் மஜீத் இமாம் மவுலானா அப்துல் அஜீஸ் என்பவர்மீது வழக்குப்பதிவு செய்ய உறுதுணையாகவும் குர்ரம் ஜகி இருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு தனது பத்திரிகையாளர் நண்பருடன் கராச்சி நகரில் உள்ள ஒரு உணவகத்தில் ஜகி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நான்குபேர் ஜகியை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதில் படுகாயமடைந்த ஜகி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவருடன் இருந்த பத்திரிகையாளரான காலித் மற்றும் அருகாமையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அஸ்லம் ஆகியோர் உடல்களிலும் குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கராச்சி நகர போலீசார் குற்றவாளிகளை கைதுசெய்ய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானில், மத சகிப்புத்தன்மை மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் எழுப்பி வரும் சமூக ஆர்வலர்கள் இதுபோல் கொடூரமான முறையில் கொல்லப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருவது, குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply