தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்காது: கும்பகோணத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

stalinதஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் முதல் பிரசாரம் செய்து வருகிறார். இதன்படி நேற்று கும்பகோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து நேற்று கும்பகோணத்தில் திறந்த வேனில் நின்றபடி மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 

காவல் துறைக்கு தி.மு.க. ஆட்சியில் முழு சுதந்திரம் அளிக்கப்படும். நத்தம் விஸ்வநாதனின் பினாமி அன்புநாதனை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளின் மாறுதல்களில் நடைபெறும் ஊழல்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தடுக்கப்படும்.

 

கருணாநிதி கடந்த 10-ந்தேதி வெளியிட்ட தோதல் அறிக்கையில் 501 உறுதிமொழிகள் உள்ளன. அதில் போலீசாருக்கு 4-வது போலீஸ் கமிஷன் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 போலீஸ் கமிஷன் அமைத்தது தி.மு.க. ஆட்சியில் தான். பெண் போலீசாருக்கு உள்ள குறைகளை களைய ஒரு பெண் ஐ.ஜி. தலைமையில் குழு அமைக்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் போலீஸ் துறையில் அரசியல் தலையீடு இருக்காது. வேளாண்மை துறைக்கு தனிபட்ஜெட் போடப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தோதல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்.

 

கும்பகோணம் தொகுதியில் அரசு மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கி தரம் உயர்த்தப்படும். உத்தமதாணியில் உ.வே.சா. நினைவு இல்லம் புதுப்பிக்கப்பட்டு காப்பாளர் நியமிக்கப்படுவார். கும்பகோணம், நாச்சியார்கோயில், சுவாமிமலை போன்ற பகுதிகளில் அரசின் கைவினை பொருட்களை தயாரிக்கும் மையம் அமைக்கப்படும். கும்பகோணம் பண்பாட்டு கலாச்சார மையமாக அறிவிக்கப்படும். கும்பகோணத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். கும்பகோணம் புறவழிசாலையில் புதிய பேருந்து நிலையமும், தீயணைபபு நிலையத்துக்கு புதிய இடத்தில் புதியகட்டிடமும், மேலக்காவிரியில் புதிய பாலமும், அண்ணலக்கிரஹாரம், தாராசுரம், உள்ளூரி, பழவத்தான் கட்டளை உள்ளிட்ட ஊராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டங்கள் கொண்டு வரப்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்கும் விடுதி கட்டி தரப்படும். கொள்ளிடம் குடிநீர் திட்டம் பாதுகாக்கப்படும். காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பு அணைகள் கட்டப்படும்.

 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

அதேபோல் திருவிடைமருதூர், பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளிலும் வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply