அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள்: ஜெயலலிதா
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, விருத்தாசலம், அருப்புக்கோட்டை, சேலம், திருச்சி, புதுச்சேரி, கோவை, பெருந்துறை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.
இந்த நிலையில், நேற்று மாலை அரக்கோணத்தில் நடந்த பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று, திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்பது தான் பொருள். நிலக்கரி ஊழல்; 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்; ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் என பல்வேறு ஊழல்களை செய்து, மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி தான் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி. காமன்வெல்த் விளையாட்டிலே கூட விளையாடியவர்கள் என்றால் அந்தக் கூட்டணி எப்படிப்பட்ட ஊழல் கூட்டணி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி, பதவியில் இருந்த போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றது பற்றி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படித் தான் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என ஊழல் ஆட்சியையே தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து மத்தியிலும், மாநிலத்திலும் நடத்தி வந்தனர்.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, தொழில் துவங்க அனுமதிப்பதில் ஊழல், மின் கொள்முதலில் ஊழல், நிலக்கரி இறக்குமதியில் ஊழல், வேலை வாய்ப்பு வழங்குவதில் ஊழல், பணி மாற்றத்தில் ஊழல் என எங்கும் எதிலும் ஊழல் தான்.
1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்டரம் என்ற இமாலய ஊழலை நிகழ்த்தியது தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய மந்திரி தான். ஏர்செல்-மேக்சிஸ் ஊழல், பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை தொலைகாட்சி நிறுவனத்திற்கு பயன்படுத்தியதில் ஊழல் என, எல்லாவற்றிலும் ஊழல் புரிந்தவர்கள் தான் தி.மு.க.வினர். ஊழலையே தொழிலாகக் கொண்டுள்ள தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வாக்கு சேகரிக்க உங்களைத் தேடி வரும் போது அவர்களது ஊழல்களை எடுத்துச் சொல்லி ஓட, ஓட விரட்டி அடியுங்கள். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?.
தேர்தல் அறிக்கையில் இல்லாத சில புதிய அறிவிப்புகளை இப்போது செய்ய விரும்புகிறேன். இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டுவரப்படாத திருக்கோவில்களில், 20 ஆண்டுகளாக பணிபுரிந்து 60 வயதினை நிறைவு செய்து ஓய்வு பெற்ற கிராம கோவில் பூசாரிகளுக்கு 750 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த மாத ஓய்வூதியத்தை, 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கியது எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு. இந்த ஓய்வூதியம் காலத்திற்கேற்ப உயர்த்தப்படும். கிராம கோவில் பூசாரிகளுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கிராமப் புறங்களில் உள்ள ஏழ்மையை நீக்குவதற்காக, ‘‘புது வாழ்வு‘‘ என்னும் ஒரு புதுமையான திட்டம் உலக வங்கி கடனுதவியுடன் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 2005-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவடையும். எனவே, 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘‘இரண்டாம் புது வாழ்வு திட்டம்‘‘ உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் இதற்கான அனுமதியை உலக வங்கி வழங்கிவிடும். தற்போது புது வாழ்வு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் இரண்டாவது திட்டத்திலும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பற்றி பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது நாங்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ஏழை – எளிய மக்களுக்கு விலையில்லாமல் சிலவற்றை வழங்குவோம் என்ற உறுதியை அளித்திருக்கிறோம் என்று பிற கட்சிகள் சொல்வதை நான் மறுக்கவில்லை. அது உண்மை தான்.
ஏனெனில், எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு எப்போதும் இருப்பது ஏழைகளின் பக்கம் தான். எனவே, ஏழை எளியோருக்கான திட்டங்களாக, அவர்களை வாழ்வில் கை தூக்கி விடும் திட்டங்களாக, அவர்களும் தங்கள் சொந்தக் கால்களிலே நின்று வருவாய் ஈட்டும் திட்டங்களாக, எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் அமைந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், எனக்கென்று குடும்பம் இல்லை. எனக்கு எந்தவித சுயநலமும் இல்லை. இலவச வண்ண தொலைகாட்சி பெட்டியை கொடுத்து பல ஆயிரம் கோடி ரூபாய் கேபிள் டி.வி. கட்டணமாக அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனவே தான், எங்களது தேர்தல் அறிக்கையில் மக்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க.வினர், பா.ம.க., மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் என பலரும் என் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகளை இதுநாள் வரை சொல்லிவந்தனர். எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசின் மீதும், குறைகள் சொல்வதோடு மட்டுமல்லாமல், குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர். தற்போது அதையெல்லாம் நிறுத்திவிட்டு எங்களது தேர்தல் அறிக்கையை பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். இதில் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்ற இயலாதவை என இவர்கள் எல்லோரும் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.
இந்த அம்மையார் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே முடியாது. அந்த அம்மாவை நம்பி ஏமாந்து போகாதீர்கள் என்று திரும்பத் திரும்பக் கூக்குரல் இடுகின்றனர். எந்த ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்னாலும், அதைப்பற்றி 100 தடவை அல்ல, ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி தருபவள் தான் இந்த ஜெயலலிதா. என்னால் நிறைவேற்ற முடியும் என்றால் தான் நான் எந்த வாக்குறுதியையும் அளிப்பேன். இது தமிழக மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.
எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்கிறேன். மக்கள் நலனுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள், உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் தான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் விரோத செயல்களின் உச்சத்திற்கே சென்று இந்த தேர்தல் அறிக்கையை தடைசெய்ய வேண்டும் என்று நீதிமன்றத்திற்கே தி.மு.க. சென்றுள்ளது. இவர்கள் தான் மக்களின் எதிரிகள். அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
இப்போது இந்தத் தேர்தலையொட்டி 2016-ல் நான் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஏராளமான அறிவிப்புகள் இருந்தாலும், வாக்குறுதிகள் இருந்தாலும், இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள். ஒரு தாய்க்குத் தான் தன் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்; எப்போது செய்ய வேண்டும்; அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும். எனவே, இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள். நீங்களே எதிர்பார்க்க முடியாத; நீங்களே கற்பனை செய்து பார்க்க முடியாத, இன்னும் சிறந்த திட்டங்களை, இன்னும் உன்னதமான திட்டங்களை நான் கொண்டு வந்து உங்களுக்காக செயல்படுத்துவேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply