பாகிஸ்தானில் கவுரவ கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களை உறவினர்களே சுட்டு வீழ்த்தினர்
பாகிஸ்தானில், காதல், கள்ளக்காதல் விவகாரங்களில் சிக்கும் பெண்களை அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களோ அல்லது உறவினர்களோ கொடூரமான முறையில் கவுரவ கொலை செய்துவிடுகின்றனர்.அங்கு உள்ள பைசலாபாத் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 22, 28 மற்றும் 29 வயதுடைய 3 பெண்கள் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக அவர்களது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து நேற்று முன்தினம் அந்த பெண்களின் உறவுக்கார ஆண்கள் சிலர் அவர்கள் 3 பேரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.கடந்த வாரம் வடமேற்கு பகுதியில், தனது தோழி காதலனுடன் வீட்டை விட்டு ஓடுவதற்கு உதவியதற்காக ஒரு இளம் பெண்ணுக்கு கிராம பஞ்சாயத்து மரண தண்டனை விதித்தது. அந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை தீ வைத்து கொளுத்தினர். முன்னர் கவுரவ கொலையில் ஈடுபடும் நபர்களை கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மன்னித்து விட்டால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என இருந்த சட்டத்தில் கடந்த 2005–ம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் இறுதி முடிவு நீதிபதியின் கையில் இருப்பதால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கொலைகாரர்கள் தப்பிவிடுகின்றனர்.பாகிஸ்தானை சேர்ந்த பெண் இயக்குனர் ஒருவர் பாகிஸ்தானில் நடைபெறும் கவுரவ கொலைகள் குறித்து ‘‘ஏ கேர்ள் இன் தி ரிவர் : தி பிரைஸ் ஆப் பர்கிவ்னஸ்’’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை எடுத்தார். இது சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது.இந்த ஆவணப்படம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய தூண்டுதலை ஏற்படுத்தி உள்ளது எனவும், இதன் மூலம் கவுரவ கொலை எனும் தீ அணைக்கப்படும் எனவும் பிரதமர் நவாஸ் ஷெரீப் சூளுரைத்தார். ஆனால் இன்றளவும் கவுரவ கொலைக்கு எதிராக புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply