விசேட குழு அறிக்ைக சபாநாயகரிடம் திங்களன்று கையளிப்பு

sabanakkarகுறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இடம்பெற்ற குழறுபடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (16) சபாநாயகரிடம் கையளிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தனது தீர்ப்பை வெளியிட உள்ளதாகவும் அறிய வருகிறது. கடந்த பாராளுமன்ற அமர்வின் போது 11 அமைச்சுக்களுக்கு 55 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவது தொடர்பான குறை நிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

 

பிரேரணைக்கு ஆதரவாக  33 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் இந்த முடிவு தவறானது என எதிரணி ஆட்சேபனை தெரிவித்து சர்ச்சையில் ஈடுபட்ட போதும் சபைக்கு தலைமை வகித்த எம்.பி சபையை ஒத்திவைத்தார்.

 

இதனையடுத்து அன்றைய தினம் இரவு 9.00 மணி வரை வாக்கெடுப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் முன்னிலையில் பரீட்சிக்கப்பட்டன. இறுதியில் ஆளும் தரப்பிற்கும் எதிர்த்தரப்பிற்கும் தலா 31 வாக்குகள் அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி எதிர்க்கட்சியினர் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

 

குறித்த பிரேரணை நிறைவெறவில்லை எனவும் இது தொடர்பில் விசாரிக்குமாறும் அவர்கள் கோரினர்.

 

இதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய, 4 பேரடங்கிய குழுவொன்றை நியமித்து அடுத்த பாராளுமன்ற அமர்விற்கு முன் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்தார். இந்த குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

 

இந்தக் குழு கடந்த 10 ஆம் திகதி கூடி இது தொடர்பில் ஆராய்ந்தது. இது தொடர்பான ஆதாரங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 

இந்த நால்வரடங்கிய குழு திங்கட்கிழமை மீண்டும் கூடி ஆராய்ந்து அதே தினம் சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இது தொடர்பில் சபாநாயகர் தமது தீர்ப்பை செவ்வாயன்று சபையில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சபாநாயகரின் முடிவு சாதகமாக அமையாவிட்டால் மீண்டும் பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்ப மஹிந்த ஆதரவு அணியும் ஜே.வி.பியும் திட்டமிட்டுள்ளதாக அறிய வருகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply