திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அருகே குண்டு வெடிப்பில் சிக்கி வாலிபர் பலியானது எப்படி?காயம் அடைந்த நண்பர் உருக்கமான பேட்டி

iraqதிருச்சி அருகே நவல்பட்டு, பர்மா காலனியில் துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. இங்கு ராணுவத்துக்கு தேவையான, ஏ.கே.47 போன்ற துப்பாக்கிகளின் உதிரி பாகங்கள், குண்டுகள், சிறிய ராக்கெட் லாஞ்சர் வடிவிலான கிரெனட்டு லாஞ்சர்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரித்தவைகளை ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஊழியர்கள் சுட்டு பரிசோதனை செய்வது வழக்கம். அப்போது வெடிக்காத குண்டு, லாஞ்சர் போன்ற பாகங்கள் தொழிற்சாலைகளில் சிக்கி சிதறி கிடக்கும்.

 

இதுபோன்ற சிதறி கிடக்கும் பொருட்களை சிலர் சேகரித்து அங்குள்ள பழைய இரும்புக் கடைகளில் போட்டு பணம் சம்பாதித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் புதுக்கோட்டை மாவட்டம் பழைய ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆசாரி ரெங்கசாமி (வயது 26), என்பவர் தனது நண்பர் ராஜசேகருடன் (வயது 24) அப்பகுதியில் கிடைத்த பொருட்களை எடுத்து இரும்பு கடையில் எடைக்கு போட முயன்ற போது குண்டு வெடித்ததில் ரெங்கசாமி பரிதாபமாக பலியானர்.

 

முதுகு, தொடை பகுதியில் பலத்த காயமடைந்த ராஜசேகர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் பலியான ரெங்கசாமிக்கு 2½ வருடத்திற்கு முன்பு தான் திருமணமாகியது. 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2–வது குழந்தை பிறந்த நிலையில் குண்டு வெடிப்பில் சிக்கி பரிதாபமாக பலியாகி விட்டார்.

 

இதுகுறித்து காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நண்பர் ராஜசேகர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

 

நானும், ரெங்கசாமியும் நண்பர்கள். நவல்பட்டு, பர்மா காலனியிலுள்ள சகோதரி சாந்தியை பார்க்க ரெங்கசாமி வாரம் ஒருமுறை வருவார். இயற்கை உபாதை கழிக்க நேற்று துப்பாக்கி தொழிற்சாலையிலுள்ள கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை (எச்.ஏ.பி.பி.) பகுதிகளில் கிடந்த பழைய இரும்பு பொருட்களை சேகரித்து விற்று கிடைக்கும் பணத்தில் மது அருந்தி ஜாலியாக இருக்கலாம் என நினைத்தோம்.

 

அப்போது உருளை வடிவ கிரெனட் லாஞ்சர் வகை வெடி பொருளில் ஈயம் இருந்ததால் அதிகப்பணம் கிடைக்கும் என்ற ஆசையில் அதை எடுத்து கடைக்கு எடுத்து வந்தோம். இரும்புக் கடையில் உரிமையாளர் சில்லறை மாற்றுவதற்காக வெளியே சென்றிருந்தார்.

 

அப்போது ரெங்கசாமி சேகரித்து வந்த பொருட்களை தரம் பிரித்து கொண்டிருந்தார். கிரெனட் லாஞ்சரை உடைத்து அதிலுள்ள ஈயத்தை எடுப்பதற்காக சுத்தியலால் வலது கையால் ஓங்கி அடித்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் அது வெடித்து சிதறியது.

 

இதில் ரெங்கசாமியின் வலது முகப்பகுதி, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது கண் சிதறியது. விரல்களும் துண்டானது. அருகில் நின்ற எனக்கும் காயம் ஏற்பட்டது. என் கண்ணெதிரிலேயே ரெங்கசாமி பரிதாபமாக இறந்து விட்டார்.

 

இவ்வாறு ராஜசேகர் கூறினார்.

 

இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் ஜப்பார், சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடித்த பழைய இரும்பு கடை உரிமையாளர் திருவெறும்பூர், பிரகாஷ் நகரைச் சேர்ந்த சுயம்பு என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதற்கிடையே ராணுவத்திற்கு துப்பாக்கி, குண்டுகள் தயாரித்து அனுப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்த துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு குளறுபடி உள்ளதால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. வெளியாட்கள் ஊடுருவு வதை தடுக்க, தடுப்பு சுவர்கள் முழுவதும் அமைத்து, மத்திய சிறைகளில் இருப்பது போல் போலீஸ் பாதுகாப்பும் போட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply