மரணத்துக்குப் பின் குழந்தையை ஈன்ற அன்னை!

womenஅமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்தது அந்த நாட்டு மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தியது.மிஸபுரி மாகாணம், கேப் ஜிரார்டோ நகரில் மேட் ரைடர், சாரா ஐலர் தம்பதி வசித்து வந்தனர்.நிறைமாத கர்ப்பிணியான சாரா ஐலருக்கு கடந்த புதன்கிழமை இடுப்பு வலி ஏற்பட்டது.அதையடுத்து, சுமார் 96 கி.மீ. தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு சாரா ஐலரை மேட் ரைடர் காரில் அழைத்துச் சென்றார்.அப்போது, அந்தக் காருடன் எதிரே வந்த டிராக்டர் மோதியதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த அந்த இருவரும், கேப் ஜிரார்டோ நகரிலுள்ள மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சாரா ஐலர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

படுகாயமடைந்த மேட் ரைடரை மேல் சிகிச்சைக்காக செயின்ட் லூஸிஸ் நகருக்கு அனுப்பி வைத்தனர். நிறைமாத கர்ப்பிணியான சாரா ஐலர் உயிரிழந்தாலும், அவரது கருப்பையில் இருக்கும் சிசுவையாவது காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அதையடுத்து, சாரா ஐலர் உடலில் அவசர “சிசேரியன்’ அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அழகான பெண் குழந்தை பிரசவிக்கப்பட்டது. 2.2 கிலோ எடையுடன் பிறந்த அந்தக் குழந்தை, உடனடியாக செயற்கை சுவாசக் கருவிக்குள் வைக்கப்பட்டது.
தாய் சாரா ஐலர் திடீரென மரணமடைந்த நிலையில் அவரது கருப்பைக்குள் இருந்த சிசுவின் மூளை, பிராண வாயுப் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் அஞ்சி வந்தனர். இரண்டு நாள்கள் கழித்து அந்தக் குழந்தையை செவிலி வெளியே எடுத்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் அந்தக் குழந்தை தன் கண்களைத் திறந்து செவிலியின் விரல்களை இறுக்கமாய் பற்றிக் கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
செயற்கை சுவாசக் கருவியிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட அந்த அதிசயக் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அது ஆரோக்கியமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.
அந்தக் குழந்தைக்கு மேடிஸன் என்று பெயரிடப்பட்டது.
மரணத்துக்குப் பிறகும் ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்ற தகவல் அமெரிக்காவில் உருக்கத்தை ஏற்படுத்தியது.
பிறப்பதற்கு முன்பே தாயை இழந்த அபூர்வக் குழந்தை மேடிஸனின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என சாரா ஐலரின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply