தேர்தலை ஒத்திவைத்தால் போராட்டத்தில் இறங்குவேன்: கருணாநிதி
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் முன்பே அறிவித்த தேதியில் தேர்தலை நடத்தாவிட்டால் தானே போராட்டத்தில் இறங்கப்போவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தேர்தலை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப் போவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஏற்கனவே குறிப்பிட்டபடி மே 23ஆம் தேதியன்று தேர்தலை நடத்த வேண்டுமெனக் கூறினார்.
அப்படி நடத்தாவிட்டால் தானே போராடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்குத் தொடர்ந்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறதென, அவர்கள் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் இவ்வாறு பதிலளித்திருக்கிறது எனவும் கருணாநிதி கேள்வியெழுப்பினார்.
தமிழகத்தில் விரைவில் மாநிலங்களவைத் தேர்தல் வருவதால், அந்த இரு தொகுதிகள் முக்கியம் என கருதப்படுவதாலும் அதனாலேயே ஜெயலலிதாவின் விருப்பப்படி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் அடிமை ஆணையமாக மாறிவிட்டதாகவும் கருணாநிதி குற்றஞ்சாட்டினார்.
570 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லையென அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply