சர்வதேச நாடுகளின் உதவிப் பொருட்களுக்கு வரி விலக்கு
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க சர்வதேச நாடுகள் பல முன்வந்துள்ளன. அவ்வாறு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பற்றிய விபரங்களை வழங்கினால் அவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.இது குறித்த அனுமதியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல்வேறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறித்த விபரங்களை நிதி அமைச்சின் செயலாளருக்கு முற்கூட்டியே வழங்கினால் அவற்றுக்கு வரி விலக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனர்த்த நிவாரணம் குறித்த ஏற்பாடுகள் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று விளக்கமளிக்கும் போதே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைக் கூறினார்.
நாட்டில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் இதுவரை 1588 மில்லியன் ரூபாவை செலவிட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் அமைச்சுக்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக அந்த செலவுகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.
வெள்ளப்பெருக்குக் காரணமாக சிறிய மற்றும் மத்திய கைத்தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது அவசியம். இது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமக்குப் பணித்துள்ளார்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கையை மீண்டும் விரைவில் எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இவற்றுக்கும் அப்பால் பல காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்கள் குறித்த பல பிரச்சினைகள் கூறப்படுகின்றன. வீடுகளைப் புனரமைப்பது மற்றும் மீளக்குடியமர்த்துவது தொடர்பில் தொடர்ச்சியான முறைப்பாடுகளும் கருத்துக்களும் அரசாங்கத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரையின் கீழ் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு வரை நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி அமைச்சு 1588 மில்லியன் ரூபாவை செலவுசெய்துள்ளோம். எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் எதுவித குறைப்பையும் செய்யாமல் வழங்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. எனினும், விமல் வீரவன்ச போன்றவர்கள் பொய்யான கருத்துக்களை கூறி மக்களைக் குழப்பப் பார்க்கின்றனர்.
அனர்த்தம் தொடர்பில் அமைச்சுக்கள் செலவு செய்யும் போது அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக சகல செலவுகளையும் செய்யுமாறு சகல அமைச்சுக்களிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்த சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு கட்சி பேதங்களை மறந்து சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply