ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்காது: ஒபாமா

obamaஆசிய நாடுகளுக்கு பத்தாவது முறையாக அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாட்டுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார்.வியட்நாம் தலைநகரான ஹனோய் நகரில் வியட்நாம் அதிபர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார்.

சீனாவுடனான வியட்நாமின் கடல் எல்லை விவகாரம் மற்றும் வியட்நாமின்மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை அகற்றுவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும், சீனாவின் அச்சுறுத்தலை சந்திக்கும் வகையில் வியட்நாமுக்கு தேவையான ராணுவ உதவிகளை வழங்கவும் ஒபாமா ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியட்நாம் அரசால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என இந்த சந்திப்பின்போது ஒபாமா வலியுறுத்துவார் என தெரிகிறது.

பின்னர், ஜப்பான் நாட்டுக்கு செல்லும் ஒபாமா, அங்கு அணுகுண்டு வீச்சால் தரைமட்டமான ஹிரோஷிமா நகரில் நடைபெறும் பொருளாதாரத்தில் வளர்ந்த ஏழுநாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 எனப்படும் நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இரண்டாம் உலகப்போரின்போது 6-8-1945 அன்று அந்நாள் அதிபர் ஹாரி ட்ருமேன் உத்தரவின்படி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரின்மீது அணுகுண்டு வீசப்பட்ட பின்னர், சுமார் அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஹிரோஷிமா நகருக்கு வரும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒன்றரை லட்சம் உயிர்களை குடித்து பல லட்சம் பேரை ஊனப்படுத்தி, வரலாற்றின் கருப்பு ஏடாக வர்ணிக்கப்படும் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு சம்பவத்துக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜப்பான் மக்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால், அப்படி மன்னிப்பு கேட்க முடியாது என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைதொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக ஜப்பானின் பிரபல தொலைக்காட்சி நிறுவன நிருபரின் கேள்விக்கு இன்று பதிலளித்துள்ள ஒபாமா, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்காது என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பேசும்போது ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்கும் வகையில் உங்களது உரை இடம்பெறுமா? என அந்த நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஒபாமா, ‘இல்லை, இதுதொடர்பாக, கேள்வி எழுப்புவதும், ஆய்வு செய்வதும் வரலாற்று ஆசிரியர்களின் பணியாகும். ஏனெனில், போர்க்காலங்களின் இடையில் பதவியில் இருக்கும் தலைவர்கள் அனைத்துவகையான முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர் என்பதை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது.

தங்களது பதவிக்காலங்களில்.., குறிப்பாக போர்க்காலங்களில் ஒவ்வொரு தலைவரும் மிக கடினமான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது என்பதை அதைப்போன்றதொரு பதவியில் கடந்த ஏழரை ஆண்டுகளாக அமர்ந்திருப்பவன் என்ற வகையில் என்னால் அறிந்து கொள்ள முடிகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிலின் மூலம் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட பேரழிவுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்காது என ஒபாமா திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

ஹிரோஷிமாவையடுத்து, ஜப்பானில் உள்ள நாகசாகி நகரின்மீதும் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு 74 ஆயிரம் மக்கள் துடிதுடித்துப் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply