அமெரிக்க வாழ் இந்திய சிறுவனுக்கு 18 வயதில் டாக்டராகும் வாய்ப்பு
அமெரிக்காவில் 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனை படைத்த இந்திய சிறுவனுக்கு 18 வயதிலேயே டாக்டராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.பிறக்கும் போதே அசாத்திய திறமைகளை பெற்று அதிபுத்திசாலியாக விளங்குபவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த ஒருசிலரில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சக்ரமென்டோவில் வசித்து வரும் தனிஷ்க் ஆபிரகாம் என்ற 12 வயது சிறுவனுக்கும் இடம் உண்டு.பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் என்ற இவனது பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.
தனிஷ்க் ஆபிரகாம் குழந்தையாக இருந்த போதே மிகுந்த அறிவு மற்றும் திறமையுடன் இருந்ததால் அவனது பெற்றோர், அமெரிக்காவின் சிறந்த கல்விமான்களை உறுப்பினர்களாக கொண்ட மிக முக்கிய திறன் மையமான ‘மென்சா’வில் 4 வயதிலேயே அவனை சேர்த்து விட்டனர்.
அவனுக்கு 7 வயது முடிவடைவதற்குள் வீட்டிலேயே பள்ளிக்கல்வியை கற்பித்து விட்டனர். இதனால் அவன் 2014-ம் ஆண்டு அதாவது தனது 10-வது வயதிலேயே மாநில தேர்வு எழுதி உயர்நிலைப்பள்ளி டிப்ளமோவுக்கு இணையான பட்டம் பெற்று விட்டான்.
அதன் பிறகு சக்ரமென்டோவில் உள்ள அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் சேர்ந்து படித்த அவன் கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் கணிதம், அறிவியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய 3 பாடத்திலும் பட்டம் பெற்று சாதனை படைத்தான்.
அமெரிக்காவில் 11 வயதிலேயே பட்டதாரியான தனிஷ்க்கின் அபார சாதனை ஜனாதிபதி ஒபாமாவின் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து அவர் தனிஷ்க்குக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்தார்.
தற்போது 12 வயதாகும் தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளான். அவனுக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் மற்றும் சாந்தா குரூஸ் கிளைகளில் சேர்ந்து படிக்க அழைப்பு வந்துள்ளது. எதில் சேர்ந்து படிப்பது என்பதை இன்னும் தனிஷ்க் முடிவு செய்யவில்லை.
இந்த நிலையில் சிபிசி சக்ரமென்டோ தொலைக்காட்சி நிறுவனம் தனிஷ்க் ஆபிரகாமை பேட்டி கண்டது. அப்போது அவன் கூறுகையில், ‘என்னுடைய 18-வது வயதில் நான் எம்.டி. (மருத்துவம்) படிப்பை நிறைவு செய்து டாக்டராவேன் என நினைக்கிறேன்’ என்று தெரிவித்தான்.
தனது திறமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ‘நானும் சாதாரண குழந்தைகளை போலத்தான் வீடியோ கேம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவேன். ஆனால் எதையாவது கற்றுக்கொள்ள விரும்புவேன்’ என்றான்.
தான் சிறுவன் என்பதால் கல்லூரியில் நிறைய பேராசிரியர்கள் தன்னை தங்கள் வகுப்பில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறிய தனிஷ்க் ஆபிரகாம், எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆக விரும்புவதாகவும் கூறினான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply