உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து போட்டி: திருச்சியில் சீமான் பேட்டி

seemanநாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இதில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 4½ லட்சம் வாக்குகளை பெற்றது. இந்த 4½ லட்சம் வாக்குகளும் தமிழகத்தில் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்காக கிடைத்த வாக்குகளாகும்.

தேர்தலுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் எங்களுக்கு சின்னம் கிடைத்தது. ஓட்டுக்கு நாங்கள் பணம் எதுவும் கொடுக்காத நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 6-வது, 7-வது இடத்தில் இருந்த எங்கள் வேட்பாளர்களின் சின்னத்தை தேடிப்பிடித்து அளித்த ஒவ்வொரு வாக்கும் எங்கள் தூய அரசியலின் நம்பிக்கைக்கு கிடைத்த வாக்குகளாகும்.

இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு 2021-ல் நல்லாட்சி அமைக்க பாடுபடுவோம். இந்த 5 ஆண்டு காலத்தை எங்கள்களமாக மாற்றுவோம். சட்டமன்ற தேர்தலை போலவே நடை பெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். அதற்குரிய ஆலோசனை நடத்துவதற்காக திருச்சியில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு அவர்களுடன் இணைவதாக கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று காட்டுவோம் என்றுதான் கூறினேன்.

அதேபோல அவர்கள் பெற்ற வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி 1.1 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மக்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை மட்டும்தான் மாற்று கட்சிகளாக நினைக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது என்பது தவறு. தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தவர்கள் ஆளுங்கட்சி ஆகிவிட்டார்கள். ரூ.500 கொடுத்தவர்கள் எதிர்க்கட்சி ஆகிவிட்டார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றது வெற்றியல்ல. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பெற்றதுதான் உண்மையான வெற்றியாகும். சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. வாக்குச் சாவடி முன்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வீடியோ ஆதாரம் என்னிடம்கூட உள்ளது.

ராஜீவ் கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் 173-வது பிரிவு என்ற தமிழக அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தருவேன் என்று கூறுவதை நிறைவேற்ற மாட்டார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்தபோது இதை நிறை வேற்றாதது ஏன்? இந்த வாக்குறுதியை மட்டு மல்ல, மதுவிலக்கை அமல் படுத்துவேன் என்ற வாக்குறுதி உட்பட எதையும் நிறை வேற்ற போவதில்லை.

தமிழகத்தில் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்குகளில் அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்து பரப்பப்பட்டு அவர்களது செல்வாக்கை சரிக்கும் செய்திகளுக்கு பின்னணியில் இருப்பவர்கள் பற்றி தெரியாது. அதுகுறித்து கவலைப்படுபவர்களுக்கு தான் பிரச்சினை. நான் கவலைப்படுவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நிர்வாகிகள் வியன்னரசு, கார்வண்ணன், பாக்கியராஜ், சந்துரு, திருச்சி மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் இருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply