பாகிஸ்தானில் இந்து வியாபாரிக்கு சித்ரவதை போலீஸ்காரர் கைது
பாகிஸ்தானில் கோட்கி மாவட்டம், ஹயாத் பிட்டாபி நகரை சேர்ந்தவர் வியாபாரி கோகல்தாஸ். இந்து மதத்தை சேர்ந்தவர். ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகிற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நோன்பு திறப்பதற்கு முன்பாக இவர் உணவுப்பண்டங்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரம் அடைந்த அலி ஹசன் என்ற போலீஸ்காரர், கோகல்தாசை பிடித்து, அவர் வயதானவர் என்பதையும் பொருட்படுத்தாமல் சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்திருக்கிறார்.
இது தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதன்பேரில் உடனடியாக போலீஸ்காரர் அலி ஹசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிந்து மாகாண போலீஸ் ஐ.ஜி., ஏ.டி.கவாஜா உத்தரவிட்டார்.
இதற்கிடையே கோகல்தாஸ் சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக அவரது பேரன் வினோத் குமார் அங்குள்ள ஜார்வார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பாகிஸ்தான் தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, போலீஸ்காரர் அலி ஹசனை கைது செய்தனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத்தலைவர் பிலாவல் பூட்டோவின் சகோதரி பக்தவார் பூட்டோ சர்தாரி ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
போலீஸ்காரர் அலி ஹசன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட போலீஸ் ஐ.ஜி., கவாஜாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply