சமஸ்கிருதத்தை திணித்தால் ஓட, ஓட விரட்டி அடிப்போம்: திருமண விழாவில் கருணாநிதி ஆவேசம்
மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா – கமலா ஆகியோரின் மகள் டாக்டர் பூங்கோதை எம்.எல்.ஏ. – பாலாஜி ஆகியோரின் மகள் சமந்தாவுக்கும், ஸ்ரீநாத்-ரோசல் ஆகியோரின் மகன் கிரணுக்கும் இன்று சென்னை சாந்தோமில் திருமணம் நடந்தது.தி.மு.க. தலைவர் கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆலடி அருணா இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன். ஆனால் உடல்நலம் அதற்கு ஒத்துழைக்காமல் இருந்தது. மண வீட்டாரிடமும் விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதையும் நேற்று கூறி விட்டேன்.
ஆனால் காலையில் எழுந்தவுடன் ஆலடி அருணா இல்ல திருமண விழாவுக்கு எப்படி செல்வது என்கிற கேள்வி என்னை துளைத்தெடுத்தது. கண்டிப்பாக போய்தான் தீர வேண்டும், என் தம்பி ஆலடி அருணா ஆற்ற வேண்டிய கடமையை ஆற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இங்கு வந்துள்ளேன்.
தமிழகத்தில் மீண்டும் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி நடைபெறுகிறது. இங்கு வடமொழியின் ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்கிறார்கள். இது நடைபெறுமானால் அதனை எதிர்த்து ஒரு கிளர்ச்சியை உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வட மொழி கலாச்சாரம் பரவுமேயானால் அதனை எதிர்க்க நாம் தயாராக வேண்டும். வடமொழி ஆதிக்கம், செல்வாக்கை கொண்டு வரும் முயற்சியை சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும்.
தமிழகத்தில் சமஸ்கிருதம் மட்டுமின்றி வேறு எந்த மொழிக்கும் இடம் இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து சமஸ்கிருதத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்கிற உறுதியை நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, தொழில் அதிபர் ராஜாசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply