யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவசர நிதியுதவி வழங்கப்பட வேண்டும்:வீ.ஆனந்தசங்கரி

sangariயுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவசர நிதியுதவி வழங்கப்பட வேண்டும்.
எதிர்பாராதவிதமாக சொற்ப நேரத்தில் கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட சம்பவத்தால் தமது சகல சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது வீடுகளுக்கும் ஏனைய சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இழந்தவற்றை மீளப்பெறுவது என்பது சுலபமான காரியமல்ல. இந்த சம்பவத்தின் தாக்கம் அங்கு அந்த இடத்தில் உள்ளவர்களுக்கே தெரியுமாகையால் வழங்கப்பட்ட புனர்வாழ்வு பற்றி பாதகமாகவோ சாதகமாகவோ நான் கருத்துக்கூறுவது சரியல்ல. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிட்ட சில காலத்துக்கு மாதாமாதம் 50,000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற அரசாங்கத்தின் முடிவை நான் பாராட்டுகின்றேன்.
இத்தகைய சம்பவங்களால் அவர்கள் எத்தகைய துன்பத்தை அனுபவித்திருப்பார்கள் என்பதை கிளிநொச்சியை சேர்ந்தவன் என்பதால் அதனை நான் நன்கு அறிவேன். கடந்த 17-10-2009 இல் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஏழு பக்கங்களை கொண்ட நான் எழுதிய நீண்ட கடிதத்தில் ஒரு பந்தியை மட்டும் இங்கு தருகிறேன்.
“ஜனாதிபதி அவர்களே, மக்களின் சொத்துக்களை பாதுகாத்துத் தருவதாக உறுதியளித்துள்ளீர்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நான் ஒரு பிச்சைக்காரரையும் கண்டதில்லை. அநேகர் மிகவும் வசதியாக வாழ்ந்தார்கள். சிலர் பெரும் வீடுகள் அமைத்து பெட்டியுடன் சேர்ந்த உழவு இயந்திரம், லொறி, கார், வேன்கள், இருசக்கர உழவு இயந்திரங்கள், பல ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை சொந்தமாக வைத்திருந்தனர். சிலர் பெரும் கமக்காரர்களாகவும் வேறு சிலர் பாற்பண்ணையாளர்களாகவும், கோழிப்பண்ணையாளர்களாகவும் இருந்தனர். சிலர் தங்களின் சேமிப்பாக வைத்திருந்த தங்கம் உட்பட அத்தனையையும் விட்டுச்சென்றனர். இவர்கள் திரும்பி தமது வீடுகளுக்கு வரும்போது அங்கே எதுவும் இருக்கப்போவதில்லை. நீங்கள் அனுமதி வழங்குவீர்களாக இருந்தால் தமது அசையும் சொத்துக்களை ஒரு பொது இடத்தில் வைத்து பாதுகாத்து கொடுத்தால் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்”
நான் எதிர்பார்த்தது போலவே நடந்தேறியது. யுத்தம் முடிந்ததும் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியவேளை அவர்கள் விட்டுச்சென்ற எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. வீடுகளில் இருந்த இணைப்புக்கள், ஜன்னல்கள், கதவுகள் போன்ற அத்தனையும் அகற்றபட்டிருந்தன. இன்று சலாவ கிராமத்தில் காணும் அதே காட்சியைத்தான் யுத்தம் முடிந்தவுடன் மட்டுமல்ல ஏழு ஆண்டுகள் கடந்த பின்பும் சில இடங்களில் இன்றும் வன்னியில் காணக்கூடியதாக உள்ளது. ஒரேயொரு வித்தியாசம் யாதெனில் அவர்களின் சிறிய, பெரிய வீடுகள் இருந்த இடத்தில் சிறு குடிசைகள் தோன்றுவதோடு இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன.; சிறு குடிசைகளில் அவர்களின் வாழ்க்கை மிகமோசமாகவும் மனித வாழ்விடங்களுக்கு உதவாததாகவும் முறையான வருமானம் பெற முடியாமலும், போதிய உணவின்றியும் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள்.
ஜனாதிபதி அவர்களே, ஒரு வருடத்துக்கோ அல்லது அதற்கு மேலாகவோ ஒரு திட்டத்தை உருவாக்கி அவசியமாக தேவையானவர்களுக்கு கூப்பன் மூலமாக இலவச உணவு அல்லது குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் அத்துடன் மாதாமாதம் 25,000 ரூபா சேர்த்துக்கொடுத்தால், பூர்த்தியாகாது இருக்கும் தங்கள் வீடுகளை பூர்த்தி செய்து தமக்கு வேண்டிய வருமானத்தையும் தேடிக்கொள்வார்கள்.
மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் பற்றி தங்களின் கவனத்திற்கு கொண்டுவராமல் இருப்பதால் அவர்கள் வசதியாக இருக்கின்றார்கள் என்ற அர்த்தமல்ல. புலம் பெயர்ந்தவர்களால் வழங்கப்படும் நிதி உதவிகள் உரியவர்களுக்கு சென்றடைவதில்லை. ஆகவே 1975ம் ஆண்டு நிறுத்தப்பட்ட கூப்பனுக்கு உணவு வகைகள் வழங்கி வந்த முறைமையை, வருமானம் குறைந்தவர்களுக்கு வழங்கி வைப்பீர்களேயானால் வசதகுறைந்தவர்கள் எவரும் பட்டினி கிடக்க வேண்டிய நிலைமை ஏற்படாது. வன்னியிலும் வேறு பிரதேசங்களிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் நிதியுதவி கோரிக்கையை புறந்தள்ளாமல் ஒரு சாதகமான முடிவை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இத்திட்டத்திற்கு போதிய நிதி குறைபாடு இருப்பின் வன்னியில் கைப்பற்றப்பட்ட தங்கத்தை இதற்கு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள

வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – தமிழர் விடுதலைக் கூட்டணி

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply