அமெரிக்க இரவு விடுதியில் 50 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்: விசாரணையில் தகவல்
அமெரிக்க இரவு விடுதியில் 50 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் உள்ள ‘பல்ஸ்’ ஓரினச்சேர்க்கையாளர் இரவு விடுதியில் நேற்று முன்தினம் அதிகாலை மர்மநபர் ஒருவர் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 50 பேர் கொல்லப்பட்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு போலீசான எப்.பி.ஐ. விசாரணைக்கு பிறகு இரவு விடுதியில் தாக்குதல் நடத்தியவர் உமர் மாதீன் (வயது 29) என்பதும், அவர் ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர், புளோரிடா மாகாணத்தின் போர்ட் செயின்ட் லூசி நகரில் வசித்து வந்ததையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.
அவரைப் பற்றிய விசாரணையை மத்திய புலனாய்வு போலீசார் தொடர்ந்து மேற்கொண்டனர்.
அப்போது, இங்கிலாந்தின் ஜி4எஸ் செக்யூரிட்டி என்னும் தனியார் நிறுவனத்திற்காக உமர் மாதீன் 2007-ம் ஆண்டு முதல் காவல் அதிகாரியாக பணிபுரிந்தது தெரியவந்தது. துப்பாக்கியை கையாளும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அவரைப் பற்றி சந்தேகம் எழுந்ததால் 2 முறை மத்திய புலனாய்வு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
முதல் விசாரணை பணியில் சேர்ந்தபோது நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் எதனுடனாவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரித்தனர். ஆனால், அவரைப் பற்றிய எந்த தவறான பின்னணியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதேபோல் 2013-ம் ஆண்டும் உமர் மாதீனின் பின்னணி குறித்து மீண்டும் புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். சிரியா நாட்டில் செயல்படும் ஐ.எஸ். இயக்கத்தினருடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
2014-ம் ஆண்டு சிரியாவில் மனோர் முகமது அபு சல்ஹா என்ற அமெரிக்க பிரஜை தற்கொலை படைத் தாக்குதலில் ஈடுபட்டார். அவருடன் உமர் மாதீனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எனினும் இந்த விஷயத்தில் உமர் மாதீன் குறித்து கவலைப்படும்படியாக எந்த பின்னணியும் கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், பணியின்போது தான் வைத்திருந்த ஜி4எஸ் நிறுவனத்தின் துப்பாக்கி எதையும் அவர் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தினரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் இது தொடர்பாக எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே, உமர் மாதீன் சிதோரோ யூசுபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், அடுத்த 4 மாதத்தில் அவரை விவாகரத்து செய்த தகவலும் வெளியாகி உள்ளது.
இதுபற்றி சிதோரோ யூசுபி கூறுகையில், ‘‘எனக்கும் உமர் மாதீனுக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. அவர், எப்போதும் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பார். எதையும் வெறுப்புணர்வுடன் பார்ப்பார். அடிக்கடி என்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவார். இல்லை என்றால் கடுமையாக திட்டுவார். அவருடைய சித்ரவதையை என்னால் தாங்க முடியவில்லை. இதனால்தான் எனது குடும்பத்தினர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தந்தனர்’’ என்றார்.
புளோரிடா மாகாண சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க எம்.பி.க்கள் சிலர் துப்பாக்கி விற்பனைக்கு கடுமையான சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்க அரசை வலியுறுத்தி உள்ளனர். ராபர்ட் கேசி எம்.பி. கூறுகையில், இது தொடர்பாக ஒரு மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்றார்.
இந்த நிலையில், துப்பாக்கிகள் மற்றும் வெடிக்கும் தன்மை கொண்ட ரசாயன பொருட்களுடன் ஒருவர் சாந்தமோனிகா நகரில் காரில் செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஓரினச்சேர்க்கையாளர் திருவிழாவில் தாக்குதல் நடத்தப் போவதாகவும் கூறப்பட்டது.
அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த காருக்குள் 3 கைத்துப்பாக்கிகள் 19 லிட்டர் ரசாயன திரவமும் இருந்தது. மேலும், புளோரிடா இரவு விடுதி சம்பவத்துக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது.
எனினும் காரில் இருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இரவு விடுதியில் 50 பேரை சுட்டுக்கொன்ற உமர் மாதீன் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை அமெரிக்க புலனாய்வு போலீசார் நேற்று உறுதி செய்தனர்.
ஆர்லாண்டோ இரவு விடுதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பும் பொறுப்பு ஏற்றுக் கொண்டு உள்ளது. இது பற்றிய அறிவிப்பை ஐ.எஸ். அமைப்பின் அல்பயான் குழுவின் வானொலி வெளியிட்டது.
ஆர்லாண்டோ சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கையாளர் விழா, இதர விழாக்கள் நடைபெறும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply