ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்! ஜெயா கோரிக்கை

modi-jeyaதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தின் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க தமது அலுவலகத்திலேயே சிறப்புக் குழு அமைப்பதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கடந்த மே 23-ம் திகதி ஜெயலலிதா பதவியேற்றார். இந்தநிலையில் மோடி விடுத்த அழைபை ஏற்று, முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்றார்.

பின்னர் மாலை 04.30 மணிக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்துக்குச் சென்றார். மாலை 4.45-க்கு இருவரும் சந்தித்தனர்.

அப்போது பேரவை தேர்தல் வெற்றிக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 29 மிக முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்தார்.

பிரதமரிடம் அளித்த 34 பக்க மனுவில் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் உரிமை பிரச்சினைகள், தமிழக திட்டங்களுக்கான அனுமதி, நிதித்தேவை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

மேலும், கச்சத்தீவை மீட்பதுடன், அங்குள்ள அந்தோணியார் தேவாலயத்தை தமிழக மீனவர்கள் பங்களிப்புடன் கட்ட வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

கூடங்குளம் இரண்டாவது அலகில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும்.

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும். மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற 29 கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தன.

மேலும், குறித்த கோரிக்கைகள் மீது சிறப்பு கவனம் செலுத்துவதுடன் தமிழகம் தொடர்பான விவகாரங்களுக்கு விரைவாக தீர்வு காண சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என அப்போது முதல்வர் பிரதமரை கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘தன் அலுவலகத்திலேயே சிறப்புக் குழுவை அமைத்து, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் ஆலோசித்து, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என ஜெயலலிதாவிடம் உறுதியளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply