எஞ்சிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் படையினரிடம் சரணடைய வேண்டும் : ஜனாதிபதி

எஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் பாதுகாப்புப் படையினரிடம் உடனடியாக சரணடைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார்.தங்களது பிடியிலுள்ள அப்பாவி பொதுமக்கள் சகலரையும் உடனடியாக விடுவிக்குமாறும், பொது மக்கள் அச்சம் பீதியின்றி வாழ இடமளிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார் மேல் மாகாண சபைக்கான தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தெஹிவளை, அவிசாவளை, ஹோமாகம, கொலன்னாவ மற்றும் இரத்மலானை ஆகிய தொகுதிகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உரையாற்றினார். இவ்வுரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐ. ம. சு. முன்னணியின் தெஹிவளை, இரத்மலானை, அவிசாவளை, ஹோமாகம மற்றும் கொலன்னாவை ஆகிய தொகுதிகளின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-

நாட்டை ஐக்கியப்படுத்தும் பணியில் எமது படைவீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். இதன் மூலம் பாரிய வெற்றிகளை அடைய முடிந்திருக்கிறது. நாட்டை ஐக்கியப்படுத்தும் மனிதாபிமானப் பணிகள் அடுத்துவரும் சில தினங்களுக்குள் பூர்த்தியாகும்.பாதுகாப்பு வலயத்தில் தங்கியுள்ள அப்பாவி மக்களைக்கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் இயக்கத் தலைவர் செயற்படுகிறார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாற்றமடைந்து, வழி தவறி ஆயுதம் ஏந்தியுள்ள எஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் சகலரும் ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவத்தினரிடம் உடனடியாகச் சரணடைய வேண்டும். தங்களது பிடியிலுள்ள பொது மக்களை விடுவிக்க வேண்டும். பிரபாகரனும் ஆயுதங்களைக் கைவிட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டிய காலம் வந்துவிட்டது. பொது மக்கள் அச்சம், பீதியின்றி வாழ இடமளிக்கப்பட வேண்டும்.

மாவிலாற்றைத் திறப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் கிழக்கு மாகாணம் ஏற்கனவே பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது. வட பகுதியும் முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டது.

பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்ற மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாமல், தமிழ் மக்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

புலிகளின் பிடியிலிருந்து வடக்கு, கிழக்கையும் அங்கு வாழும் மக்களையும் விடுவிக்கவென நாம் மேற்கொண்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பலவிதமான அழுத்தங்களை எதிர்கொண்டோம். இருப்பினும் அந்த அழுத்தங்களைக் கண்டு எமது நடவடிக்கைகளை நாம் இடைநிறுத்திவிடவில்லை.

எமது தலைமைத்துவத்தின் கீழ் பாதுகாப்புப் படையினர் அடைகின்ற வெற்றிகளைச் சிலரால் சகித்துக் கொள்ள முடியாதுள்ளது. அவர்கள் புலிகள் இயக்கத்தினருக்கு நாட்டை எழுதிக் கொடுத்தவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாச புலிகளுக்கு ரி. 56 ரகத் துப்பாக்கிகள் 5000 ஐயும், ரிசேர்ட், தொப்பிகள் மற்றும் பெனியன்களையும் வழங்கினார். அவர்கள் பின்னர் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தனர். அவர்களது ஆட்சிக்காலங்களில்தான் புலிகள் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.

வடக்கு, கிழக்கை விடுவிக்கின்ற மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எதுவுமே இடை நிறுத்தப்படவில்லை. உரமானியம் தொடர்ந்தும் வழங்கப்படுகிறது. பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பல ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன. அரச சேவைக்கு ஆட்சேர்ப்பதையும் நாம் நிறுத்தவில்லை.

தேசிய பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். உணவு உற்பத்தியை ஊக்குவிக்கின்றோம். இல்லாவிட்டால் நாமும் இன்று உணவு நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்போம். ஆகவே சகலரும் ஒன்றுபட்டு ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று செயற்பட்டு மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

இக் கூட்டத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பவித்ரா வன்னி ஆராச்சி, கீத்தாஞ்சன குணவர்தன, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply