நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தற்காலிக மையங்களில்
இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் நிலச்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு இன்றுடன் ஒரு மாதமாகின்ற போதிலும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களில் 20 சத வீதமான குடும்பங்கள் தொடர்ந்தும் 47 தற்காலிக மையங்களிலே தங்க வைக்கப்பட்டுள்ளன.பள்ளிக் கூடங்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் உட்பட பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள தற்காலிக மையங்களில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் திருப்தியளிப்பதாக இல்லை என பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் விசனமும் கவலையும் வெளியிட்டுள்ளன.
தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் மற்றும் குடியிருப்பு வசதிகளை அரசாங்கம் விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடையிடையே ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலச்சரிவு அனர்த்தங்களினால் 5500 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 1100 குடும்பங்களை சேர்ந்த 3,300 பேர் தமது வாழ்விடங்களை இழந்த நிலையில் தொடர்ந்தும் 47 நலன்புரி மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இக் குடும்பங்களில் 610 குடும்பங்களை சேர்ந்த 1750 பேர் பாரிய நிலச்சரிவு அனர்த்தம் என அரநாயக்கா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என இடர் முகாமைத்துவ அமைச்சு கூறுகின்றது.
புளத்கோபிட்டிய சம்பவத்தில் இருப்பிடங்களை இழந்துள்ள 16 குடும்பங்களுக்கு என அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை அக் குடும்பங்களிடம் கைளிக்கப்பட்டதாக உள்ளுர் தொழிற்சங்க தலைவரான என். செல்வநாயகம் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply