வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: பிரசாத் காரியவசம்

Prasad-Kariyavasamவடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அரச படையினரை அகற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிலிருக்கும் இராணுவத்தை வெளியேற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அனைத்துக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்த தூதுவர் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.

அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் இராணுவம் அகற்றிக்கொள்ளப்பட்டு தேவைக்கு ஏற்றளவு படையினர் மாத்திரம் நிலைநிறுத்தப்படுவர் என்றும் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அமெரிக்காவிற்கான தூதுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உரையாற்றிய இலங்கையின் இன மற்றும் மத சுதந்திரத்திற்கான அமெரிக்க காங்கிரஸ் குழுக் கூட்டத்தை டெனி டேவிஸ் மற்றும் பில் ஜொன்சன் ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டது.

இலங்கையின் மனித உரிமை நிலமைகள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவம் உட்பட அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்து ஒன்றரை வருடங்கள் கடந்தும் வடக்கு கிழக்கில் அரச படையினரால் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளில் 70 வீதமானவை இன்னமும் படையினர் வசமே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த மேடையில் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் வடக்கை விட அதிகமான காணிகள் கிழக்கில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிய அவர் எனினும் அந்தப் பணிகள் மந்தமாகவே இடம்பெறுவதாகவும் ஏற்றுக்கொண்டார்.

எனினும் இதனை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இராணுவம் தொடர்ந்தும் சுற்றுலா விடுதிகள் விவசாயப் பண்ணைகளை நடத்தி பொருளாதாரத்திற்கு பங்கம் விளைவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் யோசனைகளுக்கு அமைய அரசாங்கம் அரச படைக் கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்த அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும தெரிவித்தார்.

அரச படைக் கடடமைப்பை மறுசீரமைப்பதற்காக உண்மை நீதி மற்றும் மீண்டும் மோதல்கள் ஏற்படாத வகையில் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ டி கிறிப்பின் ஆலோசனைகளை பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சட்டக் கட்டமைப்பு இராணுவம் பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியன பாரியஅளவில் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ டி கிறீப் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் போது வலியுறுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலான முன்வைக்கப்பட்ட யோசனைகளை படைத் தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தெரிவித்த சுமந்திரன் புதிதாக அரசாங்கம் கொண்டுவரவுள்ள சட்டங்கள் படையினரை திருப்திப்படுத்துவதாகவே அமையும் என்றும் சாடியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்படும் சட்டமூலம் உட்பட மேலும் மூன்று சட்டமூலங்கள் யூன் மாத இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த பிரசாத் காரியவசம் எனினும் அந்த சட்டங்களின் உள்ளடக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனால் குடிப்பரம்பல் மோசமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர் இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்காது என்றும் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply