கச்சத்தீவு விவகாரம் ஜெயலலிதாவின் கருத்துக்கு கலைஞர் விளக்கம்!

Karunanidhi_7உச்ச நீதி மன்றத்தில் உள்ள வழக்கு பற்றியும் “டெசோ” கூட்டத்தில் நான் பேசியது பற்றியும் நேற்றையதினம் ஜெயலலிதா பேரவையில் பேசியிருக்கிறார்.
“கச்சத்தீவு” பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் “கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது; அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வ தேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சத் தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது. அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1976ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய எல்லைக்கோட்டுக்குள் இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது.” என்றெல்லாம் தெரிவித்தது.

பேரவையில் பேசும்போது, “1974இல் கலைஞர் கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன், பதறிப் போனேன் என்கிறார்; ஆனால் 2013இல், ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவர் சொல்லித் தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார். இது என்ன வேறுபாடு?” என்று கேட்டுள்ளார்.

15-4-2013 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.

“கச்சத் தீவு” பற்றி 15-4-2013 அன்று நடைபெற்ற “டெசோ” அமைப்பின் கூட்டத்தில், “கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நாம் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368வது பிரிவின்படி நாடாளு மன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத் தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பது தான் உண்மை. எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச நீதி மன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், “டெசோ” அமைப்பின் சார்பில் நான் இந்திய உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை 10-5-2013 அன்று தாக்கல் செய்திருக் கிறேன். உச்ச நீதி மன்றத்தில் நான் தாக்கல் செய்த இந்த மனு, 15-7-2013 அன்று தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, விக்ரம் ஜித் சென் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, எனது மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு “நோட்டீஸ்” அனுப்பிட உத்தரவிட்டனர்.

1974ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போதே நாடாளுமன்றத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 23-7-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்த போது, தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தி.மு. கழகத்தின் சார்பில் இரா. செழியன் நாடாளுமன்றத்தில் கூறினார். பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த அருமை நண்பர் மூக்கையா தேவர், “எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்றார். “இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே ரகசிய பேரம் நடத்தி கச்சத்தீவைத் தானமாக வழங்கியுள்ளது” என்று வாஜ்பாய் பேசினார். இப்படிப்பட்ட கருத்துக் களை மாநிலங்களவையில் கழகத்தின் சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்நாராயண், முஸ்லீம் லீக் சார்பில் நண்பர் அப்துல் சமது ஆகியோர் தெரிவித்தனர்.

20-4-1992 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் ஜெயலலிதா பேசும்போது, “கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால் கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று கூறினாரா? இல்லையா?

இன்னும் சொல்லப்போனால், 30-9-1994இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு. நரசிம்ம ராவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “The Ceding of this tiny Island to the Island Nation had been done by the Government of India in the interest of better bilateral relations” அதாவது “தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ்சிறிய தீவினை (கச்சத் தீவினை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்” என்று தெரிவித்தது உண்டா இல்லையா?

மீண்டும் 23-7-2003 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றைய பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நல்லுறவுப் பேணப்படவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகள் காப்பாற்றப்படவும் உள்ள ஒரே வழி என்று குறிப்பிட்டு மேலும் எழுதும்போது, “The best possible solution is to get the island of Katcha Theevu and adjacent seas on lease in perpetuity solely for fishing, drying of nets and pilgrimage. Sri Lanka’s Sovereignty over Katcha Theeve could be upheld at the same time” அதாவது கச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தர குத்தகைக்குப் பெறலாம்; அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் என்று அன்றைக்கு எழுதியவர்தான் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா.

மீண்டும் ஒரு முறை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “கச்சத் தீவு பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்கக் கூடிய அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதல் அமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத் தீவு மீட்கப்பட்டிருக்கும்” என்றார். அதையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டுத் தான் இப்போது கச்சத் தீவை நான் தான் தாரை வார்த்தேன் என்று பேரவையில் பேசுகிறார்.

கச்சத் தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன். உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களிடம் கருத்தறிந்திருக்கிறேன். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரே ஒரு முறையாவது தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து கச்சத் தீவை மீட்பது பற்றி கலந்தாலோசனை நடத்தியது உண்டா? நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், எந்த அளவுக்கு கச்சத் தீவினை மீண்டும் பெறுவதற்காகப் போராட முடியுமோ, வாதாட முடியுமோ அந்த அளவுக்கு போராடியிருக்கிறேன், வாதாடி இருக்கிறேன். ஆனால் எந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா, கச்சத் தீவுப் பிரச்சினையில், “கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்றும், “கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத் தான்” என்றும்; “கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்” என்றும்; சொன்னவர் என்பது பதிவாகி இருக்கிறது. எனவே ஜெயலலிதா அவ்வப்போது நினைத்துக் கொண்டு என் மீது வசைபுராணம் பாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது!’’

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply