மோடியின் வெளிநாடு பயணத்துக்கு அதிநவீன விமானம்

modiபிரதமர் மோடி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், இரு நாடுகளின் நட்புறவுக்காகவும் அவ்வப்போது அரசுமுறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகிறார்.அவர் பிரதமராக பதவியேற்ற கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா என்று 40 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். மேலும் அவர் பல்வேறு நாடுகளுக்கு பயணம் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, தனது வெளிநாட்டு பயணத்துக்காக மோடி ராணுவத்தில் உள்ள போயிங் 747 ரக விமானத்தை பயன்படுத்தி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இந்த ரக விமானங்களே நமது நாட்டில் பயன்படுத்துப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானத்தில் பல்வேறு வசதிகள் இருந்தாலும் கூட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருப்பது போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஏற்கனவே தீவிரவாத குழுக்களால் பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் வான்வழியாகவும் அவருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

எனவே பிரதமர் மோடி தற்போது பயணம் செய்யும் போயிங் 747 ரக விமானத்துக்கு பதிலாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போயிங் 777-300 ரக விமானத்தை வாங்கி பயன்படுத்த ராணுவ அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது. வருகிற 25-ந் தேதி டெல்லியில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் ராணுவ தளவாட கொள்முதல் அமைப்பின் கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் 2 புதிய போயிங் 777-300 ரக விமானங்களை வாங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. புதிதாக வாங்கப்பட இருக்கும் இந்த போயிங் ரக விமானங்களுக்கு ‘ஏர் இந்தியா ஒன்’ என்று பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.

இந்த விமானத்தில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் உண்டு.

போயிங் 777-300 ரக விமானம் குறித்து ஓய்வு பெற்ற ஏர் கமோடார் பிரசாந்த் தீட்சித் கூறுகையில், “வான்வழி தாக்குதலை முறியடிக்கும் அத்தனை வசதிகளும் இதில் உண்டு. சமீபத்திய அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த விமானத்தில் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் தயாராகும் இந்த வகை, போயிங் விமானம் ஒன்றின் விலை 320 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2,100 கோடி) என்பதும், அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் ‘ஏர்போர்ஸ் ஒன்’ ரக விமானம் ஒன்றின் விலை ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply