கிளஸ்டர் குண்டுகள் தொடர்பான செய்திக்கு அரசாங்கம் மறுப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகளை ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது.ஜெனீவா மனித உரிமை பேரவையில் போர்க் குற்ற விவகாரத்தை துல்லியமாக அரசாங்கம் கையாண்டுவரும் சூழ்நிலையில் சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிடும் பரபரப்பு தகவல்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இறுதிப்போரின்போது ஸ்ரீலங்கா படையினர் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கிளஸ்டர் குண்டுகள் என அழைக்கப்படும் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்டுள்ள கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் தி காடியன் பத்திரிகை திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை பகுதியில் AO-2.5RT, RBK-500 AO-2 தசம் 5 RT ரக கொத்துக் குண்டுகள் வன்னி பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்களாக அமைந்துள்ளதாக தி கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் கண்ணிவெடி அகற்றும் ஹெலோ டிரஸ்ட் குழு கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகளை மீட்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தி காடியன் பத்திரிகை இதற்கான ஆதாரங்களாக வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் கிளஸ்டர் குண்டுகளை ஸ்ரீலங்கா படையினர் பயன்படுத்தவில்லை என்பதோடு குறித்த ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியும் உண்மைக்குப் புறம்பானது – என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஆனையிறவை அண்மித்த பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் சில இடங்களிலிருந்து 2011 மற்றும் 2012 ஆண்டுகளிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட கொத்துக் குண்டுகளின் பாகங்கள் மீட்கப்பட்டதாக ஹெலோ டிரஸ்ட் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply