யுத்தம் முடிந்ததும் அரசியல் தீர்வு முன் வைக்கப்படும்:மைத்திரிபால சிறிசேன
‘வடக்கு யுத்தம் முடிந்த பின் அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன் வைக்கும்.’ என ஸ்ரீலங்கா கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இன்று மட்டக்களப்பில் தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார்.சுமார் 25 வருடங்களின் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன,
“கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வடக்கு-கிழக்கு மக்களுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்த போதிலும் யுத்த சூழ்நிலை காரணமாக துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் அந்தத் தொடர்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
யுத்தத்திற்கு இன்னும் சில நாட்களில் முடிவு கட்டப்பட்டுவிடும். அடுத்து அரசியல் தீர்வு முன் வைக்கப்படும். எப்படியான அரசியல் தீர்வு என்பதைப் பற்றி தற்போது ஆராய்ந்து வருகின்றோம்.
ஏற்கனவே யுத்த காலத்தில் பிரபல்யமானவராகவும், பலமானவராகவும் கருதப்பட்டிருந்த கருணா அம்மான் இப்போது ஆயுத போராடத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தில் இணைந்து எமது கட்சியின் உறுப்பினராகவும் இருக்கின்றார். இவர் எமது கட்சியில் இணைந்திருப்பது எமது கட்சிக்கும் பலமாகவே இருக்கின்றது” என்றார்.
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் இந்நிகழ்வில் உரையாற்றினார்.அமைச்சர்களின் வருகையையொட்டி மட்டக்களப்பு நகரிலும் புறநகர்ப் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
வைபவத்திற்கு அமைச்சர்கள் செல்லும் போதும், வைபவம் முடிந்து விமான நிலையம் திரும்பும் போதும் அவர்கள் பயணித்த வீதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்துத் தடை செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு பஸ் நிலையம், ஆட்டோ தரிப்பிடங்கள் ஆகியனவும் நண்பகல் வரை வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தன.இதனால் நகருக்கு வரும் மக்களின் நடமாட்டம் வழமையைவிடக் குறைவாகவே இருந்தது. நண்பகல் வரை நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply