தமிழர் விடயத்தில் தான்தோன்றித்தனமாக நடந்தால் என்ன நடக்குமென்று அரசுக்கு தெரியும் :முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென்றும், அதனை விடுத்து தான்தோன்றித்தனமாக நடந்தால் என்ன நடக்குமென்பதற்கு கடந்த கால அரசியல் வரலாறு உதாரணம் என்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் இயங்கிவரும், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் எனும் நிறுவனத்தால், நேற்று (புதன்கிழமை) யாழ்.நல்லூரில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய விதவைகள் பட்டயத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்-
”வட பகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், விசேடமாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் விரைந்து உதவ வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளோம். எதிர்பாராத வகையில் நிர்க்கதியாக்கப்பட்ட பல குடும்பங்கள் துவண்டு வீழ்ந்துவிடாது, அவர்களை இந்த சமூக நீரோட்டத்தில் அங்கத்துவம் பெறக்கூடிய வகையிலும் அவர்களுக்கான தொழில் முயற்சிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கி, அவர்களை தமது சொந்தக்கால்களில் நின்று குடும்பப் பாரத்தை தாங்கக்கூடியவர்களாக மாற்றியமைக்க வேண்டியது எமது தலையாய கடமையாக உள்ளது.
நடந்தவற்றை மறப்போம் புதிய நல்லுறவை சிருஷ்டிப்போம் என்கின்றார்கள். எப்படி மறப்பது? மறக்கக் கூடிய விதத்திலா தமிழர்களுடன் உறவுகள் பேணப்பட்டு வந்துள்ளன? மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமைந்துவிடாது. நீங்கள் கூறுகின்ற விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள் என்று அரசாங்கத்தை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
சகல வசதிகளுடனும் இருந்த மக்களில் எத்தனை ஆயிரம் பேர் அகதி முகாம்களில் ஏதிலிகளாக இன்று கிடக்கின்றார்கள் என்பதை நாம் கருத்தில் எடுக்க வேண்டும். பொது மக்களின் காணிகளை விடுகின்றோம் விடுகின்றோம் என்கின்றார்கள். எமது மக்களும் இலவு காத்த கிளியாக தவங் கிடக்கின்றார்கள். இது எப்போது நிறைவேறப் போகிறது என்று எமக்கும் தெரியாது அரசுக்கும் தெரியாது. இவ்வாறான செயற்பாடுகளே எம்மைச் சினமடைய வைக்கின்றன.
தற்போதைய அரசிற்கு ஒரு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலம் இந் நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்கான திட்டங்களை விரைந்து செயற்படுத்துவார்களேயாயின், அவர்கள் அழியாத் தலைவர்களாக இலங்கையிலுள்ள ஒட்டு மொத்த சமூகங்களாலும் போற்றி கௌரவிக்கப்படுவதுடன், இவர்களின் பெயர்கள் எமது முன்னைய உலகப் பெருந் தலைவர்களின் பெயர் வரிசைகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை. மாறாக எமது பணிவான கோரிக்கைகளை ஏற்க மறுத்து தான்தோன்றித்தனமாக இறுமாப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதனையும் அவர்கள் நன்கு அறிவார்கள். தம்மை உலகப் பெருந்தலைவர்கள் என பிதற்றிக் கொண்ட பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளமை இந்த அரசுக்கு ஒரு பாடமாக அமையட்டும்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply