ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து ‘அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் ஆற்றலை பெற்று இருக்கிறோம்’ வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் பெருமிதம்
ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து, அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
2 ஏவுகணைகள் சோதனை
3 முறை அணுகுண்டுகளை வெடித்து சோதித்து உலக அரங்கை அதிர வைத்த வடகொரியா, கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி அணுகுண்டை விட பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை சோதித்து பார்த்ததாக அறிவித்து உலக நாடுகளுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.
அத்துடன் நில்லாமல் தொடர்ந்து அந்த நாடு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஐ.நா. கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளபோதும், அதை கண்டுகொள்ளாமல் தனது நடவடிக்கைகளை வடகொரியா தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் சோதித்தது. அவை இரண்டும் முசுடன் வகை ஏவுகணைகள் என தகவல்கள் வெளியாகின. இவற்றில் ஒன்றின் சோதனை தோல்வியில் முடிந்ததாகவும், மற்றொன்றின் சோதனை வெற்றி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
கிம் ஜாங் அன் பார்த்தார்
முசுடன் ஏவுகணைகளைப் பொறுத்தமட்டில் அவை 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்கும் வல்லமை படைத்தவை என சொல்லப்படுகிறது.
இந்த ஏவுகணை சோதனை பற்றி வடகொரிய அரசு செய்தி நிறுவனம், “அருகில் உள்ள நாடுகளுக்கு எந்தவொரு அபாயமும் ஏற்படுத்தாமல் வெற்றிகரமாக ஏவுகணை சோதனைகள் நடந்து முடிந்துள்ளது” என கூறியது.
இந்த ஏவுகணை சோதனைகளை வழக்கம்போல அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டார்.
பெருமிதம்
சமீப காலமாக அந்த நாடு சோதித்துப்பார்த்த 4 அல்லது 5 ஏவுகணைகள் தோல்வி கண்ட நிலையில், நேற்று முன்தினம் நடத்திய சோதனைகளில் இரண்டில் ஒன்று வெற்றி கண்டிருப்பது கிம் ஜாங் அன்னுக்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது. இது மிகப்பெரிய நிகழ்வு என அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, “பசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகளை தாக்குகிற வல்லமையை நாம் நிச்சயம் பெற்று விட்டோம் என்பதையே இந்த ஏவுகணை சோதனை காட்டுகிறது” என குறிப்பிட்டார்.
உலக நாடுகள் கருத்து
இந்த ஏவுகணை சோதனையின் வெற்றி, தோல்வி பற்றி அண்டை நாடான தென்கொரியா அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இருந்தபோதும், அந்த நாட்டு அரசின் நிதி உதவியுடன் இயங்குகிற அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கொள்கை இன்ஸ்டிடியூட் கருத்து தெரிவிக்கையில், “இதுவரை வடகொரியா சோதித்த எந்தவொரு ஏவுகணையும் இவ்வளவு உயரத்துக்கு பாய்ந்து சென்றதில்லை” என கூறியது.
ஜப்பான் கருத்து தெரிவிக்கையில், “ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தாக்குதல் நடத்துகிற வல்லமையை வடகொரியா பெற்றுள்ளது. ஜப்பான் பகுதியை தாக்குகிற அளவுக்கு அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணை வல்லமையை பெற இது வழிநடத்தும்” என கூறி உள்ளது.
இதேபோன்று வடகொரியா சோதித்த 2 ஏவுகணைகளில் ஒன்று வெகு தொலைவுக்கு பாய்ந்து சென்றிருப்பதை அமெரிக்க ராணுவ மந்திரி ஆஷ் கார்ட்டரும் ஒப்புக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply