இஸ்ரேல் பாலைவனத்தில் பரிதாபம் தந்தையால் காரில் விடப்பட்ட 2 குழந்தைகள் பலி
இஸ்ரேல் நாட்டில் நெகேவ் பாலைவன பகுதியில் அல்காசோம் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்க்கிற ஒருவர், நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்றார். காரில் சென்ற அவர், தனது 18 மாத குழந்தையையும், 3 வயதான குழந்தையையும் உடன் அழைத்துச் சென்றார். பள்ளிக்கு வெளியே காரை நிறுத்திவிட்டுச் சென்ற அவர் குழந்தைகளை உடன் அழைத்துச்செல்ல மறந்து காரில் விட்டுச்சென்று விட்டார்.
அங்கு சமீப காலமாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இந்த நிலையில் பல மணி நேரம் காரில் விட்டுச்செல்லப்பட்ட குழந்தைகள் வாடி வதங்கினர். பல மணி நேரத்துக்கு பிறகு காரை வந்து திறந்த ஆசிரியர், அதில் தனது குழந்தைகள் உணர்வற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அவருக்கு குழந்தைகளை காரில் விட்டுச்சென்றுவிட்டது நினைவில் வந்தது. உடனே பதறியடித்துக்கொண்டு அவர்களை அருகில் உள்ள மாகன் ஆடம் நெருக்கடி கால ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றார். ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர்களின் உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தார்.
கடந்த மாதமும் இஸ்ரேலில் இதே போன்று ஆஷ்டாட் என்ற இடத்தில் ஒரு தந்தை தனது குழந்தையை காரில் பல மணி நேரம் விட்டுச்சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது குழந்தை இறந்து கிடந்ததைத்தான் அவரால் காண முடிந்தது.
இப்படிப்பட்ட சம்பவங்கள் அங்கு அடிக்கடி நடக்க தொடங்கியுள்ளதால் காரில் குழந்தைகளை அழைத்துச்செல்கிறவர்கள், அவர்களை மறவாமல் உடன் எடுத்துச்செல்லுமாறு அங்கு விழிப்புணர்வு பிரசார இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply