எங்கள் தலையில் அமெரிக்கா துப்பாக்கியை வைக்கும்போது அணு ஆயுதங்களை நாங்கள் கைவிட முடியாது: வடகொரியா
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.
இதன்காரணமாக, வடகொரியாமீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் அடுத்தடுத்து கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ‘முசுடான்’ ரக ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளது. இதில் ஒரு ஏவுகணை தோல்வி அடைந்ததாகவும் மற்றொரு ஏவுகணை என்னவானது? என்பது தொடர்பாக தெளிவான தகவல் ஏதுமில்லை எனவும் தென்கொரியா தெரிவித்தது.
பரிசோதிக்கப்பட்ட இரு ஏவுகணைகளும், வடகொரியாவில் இருந்து சுமார் 3400 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கி அழிக்கும் ஆற்றல் படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச தாக்குதல் தூர இலக்கான 2500 கிலோமீட்டர் என்ற அளவுகோலின்படி அண்டை மற்றும் எதிரிநாடான தென்கொரியா மீதும், அதன் ஆதரவு நாடான ஜப்பான் மீதும் ‘முசுடான்’ ஏவுகணையால் தாக்குதல் நடத்த முடியும். அதிகபட்ச தாக்குதல் தூர இலக்கான 4000 கிலோமீட்டர் என்ற அளவுகோலின்படி குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்க முடியும் என போர்க்கலை வல்லுனர்கள் கருதுகின்றனர்.
வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு சவால்விடும் வகையில் வடகொரியா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, வடகொரியாவின் அமெரிக்க விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை இயக்குனர் ஜெனரல் ஹன் சாங் ரியோல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
எங்களது அணு ஆயுத சோதனைகளுக்கு எல்லாம் அமெரிக்காவின் மிரட்டல்தான் காரணம். முதலில் அவர்கள் ராணுவ ரீதியான மிரட்டல்களையும், பொருளாதார தடைகளையும், பொருளாதார நிர்பந்தங்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், எங்கள் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு எங்களிடம் சமரசம் பேச முயல்வது சரியல்ல.
அணு ஆயுதங்களை தயார்நிலையில் வைத்திருக்கும் வல்லரசு நாடான அமெரிக்கா எங்களுக்கு பகைநாடு என்றாகிவிட்ட நிலையில் எங்கள் நாடு எதுவுமே செய்யாமல் கைகட்டிக் கொண்டு இருக்க முடியாது. அமெரிக்காவின் ஆயுத பலத்துக்கு நிகரான பலம் எங்களுக்கும் உண்டு என்பதை உலகத்துக்கு நிரூபிப்பதற்காகவே பல்வேறு ஏவுகணை சோதனைகளை நாங்கள் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் அமெரிக்காதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வடகொரியாவை ஒட்டியுள்ள கடல்பகுதி அருகே நவீனரக அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களையும், அதிநவீன போர் விமானங்களையும் குவித்து வைத்துள்ள அமெரிக்கா, சமீபத்தில், வடகொரியாவை மிரட்டும் வகையில் தென்கொரியாவுடன் சேர்ந்து இங்கு கூட்டு போர்பயிற்சியில் ஈடுபட்டதையும் சுட்டிக் காட்டியுள்ள அவர், தங்கள் நாடு நடத்திவரும் ஏவுகணை சோதனைகளை இந்த அறிக்கையின் மூலம் நியாயப்படுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply