செர்பியா நாட்டில் உணவு விடுதியில் 5 பேர் சுட்டுக்கொலை

gun fireமத்திய ஐரோப்பாவுக்கும், தென்கிழக்கு ஐரோப்பாவுக்கும் இடையே அமைந்துள்ளது, செர்பியா. அந்த நாட்டின் வட பகுதியில் ஜிதிஸ்தே என்ற இடத்தில் கிராம திருவிழா நடந்து முடிந்த நிலையில், அங்குள்ள உணவு விடுதியில் நேற்று ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் புகுந்தார்.  அவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். 

 

எனினும் இந்த சம்பவத்தின்போது 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருக்கு 35 வயதுக்கு மேலிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

 

இந்த சம்பவம் குறித்து அந்த நாட்டின் உள்துறை மந்திரி நேபோஜ்சா ஸ்டீபனோவிக், டி.வி. சானல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், உணவு விடுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், அதற்கு முன்னதாக தனது முன்னாள் மனைவியையும், மற்றொரு பெண்ணையும் கொன்று விட்டதாக தெரிவித்தார்.

 

அதே நேரத்தில் அவர் அமைதியான நபர், எந்த வழக்கிலும் இதுவரை தொடர்பு இல்லாதவர் என்றும் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த நபர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply