சுவாதி கொலை வழக்கு: விசாரணையை பாதிக்கும் தகவல்களை வெளியிடாமல் இருப்பது நல்லது- ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

suwathiசென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய ரெயில்வே போலீசார் காலதாமதம் செய்ததால், ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததுடன், 2 நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால், வழக்கின் புலன் விசாரணையை கண்காணிப்போம் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். 

 

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, ‘சுவாதி கொலை வழக்கில், குற்றவாளிகளை 2 நாட்களில் பிடிக்க வேண்டும் என்று நீங்கள் உத்தரவிட்டதால்தான், போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கில் சுவாதியின் தனிப்பட்ட விஷயங்கள் எல்லாம் பத்திரிகைகளில் வெளியாகின்றன. குற்றவாளியின் புகைப்படம், வாக்குமூலம் அப்படியே செய்தியாக வருகிறது. இதை நீங்கள் தடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

 

அதற்கு நீதிபதிகள், ‘அப்படியானால், இவ்வாறு முறையிட உங்களை அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் கொடுத்த அனுமதி கடிதம் எங்கே?’ என்று கேட்டனர். அதற்கு, ‘கடிதம் எதுவும் இல்லை’ என்று அவர் பதிலளித்தார். அதற்கு நீதிபதிகள், ‘முறையான அங்கீகார கடிதத்துடன் தகுந்த மனுவை தாக்கல் செய்தால், அந்த மனுவை தகுதியின் அடிப்படையில் விசாரித்து உத்தரவிடுவோம்’ என்றனர்.

 

பின்னர், கோர்ட்டில் ஆஜராகி இருந்த அரசு குற்றவியல் வக்கீல் மகாராஜாவிடம், ‘குற்றவாளியின் புகைப்படம், வாக்குமூலம் ஆகியவை வெளியாவதை தடுத்து நிறுத்தினால் என்ன?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

 

அதற்கு அரசு வக்கீல், ‘பத்திரிகையாளர்களுக்கு போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து எந்த தகவலும் போகவில்லை. அவர்கள் பலதரப்பட்ட மக்களிடம் பேசி, தகவல்களை பெறுகின்றனர். அதை எப்படி தடுக்க முடியும்?’ என்றார்.   இதற்கு, ‘வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான தகவல்களை வெளியிடுவதை தவிர்ப்பது நல்லது’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply