ஆட்சி மாற்றம் ஏற்படலாம்: கலைஞர் பேச்சு
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக தலைவர் கலைஞரின் 93வது பிறந்த நாள் மற்றும் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கலைஞர், திருவாரூரில் இன்று நடப்பது விழாவா அல்லது மாநாடா என்ற அளவிற்கு எனது மனதில் மகிழ்ச்சி ததும்புகிறது. இங்கு பேசுவதற்கு உடல்நிலைகாரணமாக தொண்டை பேச மறுக்கிறது. தொண்டை மறுத்தாலும் எனது தொண்டை தொடர்ந்து செயல்படுத்துவேன்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக ஒரு சதவீதத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. அதனால் ஆட்சி அமைக்க வேண்டிய விழா மாறி, இந்த விழா நடக்கிறது. ஆனால் அடுத்து வரும் விழா மகா பெருவிழாவாக நமக்கு அமைய அடித்தளமாக, அச்சாரமாக இந்த விழா அமையும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தேர்தலில் நாம் பெற்றுள்ளது தோல்வி அல்ல. அடுத்த வெற்றிக்கான அஷ்திவாரம். 1964-ம் ஆண்டு தொடங்கி திமுக தேர்தல்களில் நண்பர்களாக இருந்து வெளியேறியவர்களை, துரோகிகளை சந்தித்து வருகிறது. இதை கடந்த காலங்களில் இதுபோன்ற சோகங்களை சமாளித்து திமுக வேக நடைபோட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
தற்போது ஏற்பட்டுள்ளது தோல்வி அல்ல. அதற்காக எந்த தொண்டரும், கட்சி நிர்வாகியும் சோர்வடைய தேவையில்லை. திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திக்கும் அரசியல் கட்சி திமுக அல்ல. அரசியல் மற்றும் தேர்தலை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத்தரும் விடுதலை இயக்கமாக திமுக இருந்து வருகிறது.
திருவாரூர் தொகுதியில் 2வது முறையாக மண்ணின் மைந்தர் என்ற உரிமையுடன் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 473 ஓட்டுக்கள் அளித்து வெற்றி வாய்ப்பை கொடுத்துள்ளீர்கள். திமுகவிற்கு கிடைக்க வேண்டிய வெற்றி பறிக்கப்பட்டு விட்டது.
மத்திய அரசின் செல்வாக்கை பெற்று, பிரதமர் ஆதரவை பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிககு ஓரளவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை. ஆளும் கட்சியான அதிமுகவிற்கு ஆதரவு அளித்தார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து சக்திகளும் செயல்பட்டன. திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.
கடந்த தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள்ளேயே பிரதமர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தந்தி அனுப்பியது ஏன்?. இந்தியாவில் நடந்த தேர்தல்களில் தமிழகத்தில் மட்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பல சக்திகள் இணைந்து செயல்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்தால் திராவிடன் மார்பை நிமித்திக்கொண்டு நடப்பான். திராவிடர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதனாலேயே திமுகவிற்கு எதிரான வேலைகள் நடந்தேரியது.
4 பேரை வைத்துக்கொண்டு, 5 பேரை விலக்கி விட்டு அரசியல் நடத்துகிற கட்சி அல்ல திமுக. வலிமையான, வளமான, பகுத்தறிவு இயக்கமாக திமுக விளங்கி வருகிறது. இப்போது தோல்வி படிக்கட்டில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இதிலிருந்து வெற்றி படிக்கட்டை நாம் மிதிக்க வேண்டும். சில ஆண்டுகளில் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.
தேர்தலை ஒட்டி ரூ.570 கோடி கண்டெய்னர் லாரியில் சென்றது யாருடையது என்று சட்டப் பேரவையில் ஸ்டாலின், துரைமுருகன் போன்றவர்கள் கேட்டதற்கு, பதில் சொல்லாமல் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதையடுத்து கட்சி வழக்குரைஞர் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் டி.எஸ்.பி., விஸ்னுப்பிரியா கொலைக்கும் உரிய விசாரணை வேண்டும். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நீதிமன்றம் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நீதியே, நீயும் இருக்கின்றாராய.. இல்லை கொலைக்களத்தில் இறந்து விட்டாயா என்று கோவலன் இறந்தபோது கவுந்திஅடிக்கள் பாடியதுபோன்றுதான் சொல்லத்தோன்றும் என்றார்.
மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு, உ. மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply