ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் அணி
15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில், லயன் நகரில் நடைபெற்ற இரண்டாவது அரைஇறுதி போட்டியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் பாதியில் பிரான்ஸ் அணி ஒரு கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பிரான்ஸ் அணி வீரர் கிரீஸ்மேன் கோலாக மாற்றினார்.
இதனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது முதலே ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆட்டத்தில் 72 நிமிடத்தில் பிரான்ஸ் அணி இரண்டாவது கோலை அடித்தது.
பிரான்ஸ் அணியின் கிரீஸ்மேனே இரண்டாது கோலை அடித்து அசத்தினார். இதனால் அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தது.
அதன் பிறகு ஜெர்மனி அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் ஏதும் கிட்டவில்லை. இறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் போர்ச்சுகல், வேல்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக் கிழமை இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply