இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவருக்கு உரிமையில்லை

ranilஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வந்து தமக்கு விரும்பியவாறு மீன்பிடியில் ஈடுபடுவதற்கான உரிமை இல்லை. அவ்வாறானதொரு உரிமையை அவர்களுக்கு வழங்கவும் முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வர்த்தக ரீதியாக ட்ரோலர்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதை சம்பிரதாயபூர்வ மீன்பிடி என ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை கடற்பரப்புக்குள் வந்து குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எவ்வாறானதொரு முடிவு எடுப்பதாயினும் அது வடமாகாண மீனவர்களின் விருப்பத்துடனேயே எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

பிரதமர் கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

 

இரு நாட்டுக்கும் இடையிலான மீன்பிடிப் பிரச்சினையை இவ்வருடத்துக்குள் தீர்ப்பதற்கே எதிர்பார்த்திருப்பதாகவும், இவ்விடயத்தை வைத்துக்கொண்டு யுத்தமொன்றுக்குச் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்ட பிரதமர், பொட்டம் ட்ரேலிங் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

 

காங்கேசன்துறை கற்பிட்டிவரையும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையான இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக ‘பொட்டம் ட்ரோலிங்’ முறையை பயன்படுத்தி அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் செய்மதிமூலம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய மாதாந்தம் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான சட்டவிரோத இந்திய படகுகள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுகின்றன. எமது கடற்பரப்புக்குள் இடம்பெறும் இந்த சட்டவிரோத மீன்பிடியினால் வடக்கு, கிழக்கிலுள்ள மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்படும் பொட்டம் ட்ரோலிங் முறையூடாக கடலில் காணப்படும் சகல வளங்களும் அழிக்கப்படுவதுடன், கடலில் காணப்படும் பல்லின உயிர்வகைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இச்சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடியிருப்பதுடன், இரு நாட்டு கடற்படையினரும் சர்வதேச கடல் எல்லை சந்திப்பில் ஆராய்ந்துள்ளனர். இந்திய மத்திய அரசாங்கத்தின் மீன்பிடித்துறை அமைச்சு மற்றும் இரு நாட்டு மீனவர்களையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகள் இம்மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும். இதன்போது விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

அத்துடன், வர்த்தக ரீதியான பொட்டம் ட்ரோலிங் முறையை தடை செய்வது தொடர்பாக சுமந்திரன் எம்பி கொண்டுவந்த தனிநபர் சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெ ளியிடப்படும்.

 

இதனை விரைவில் நிறைவேற்றுவதன் ஊடாக சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க முடியும். சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கு மீன்பிடித்துறை அமைச்சு எவருக்கும் அனுமதி வழங்காது, இதனைத் தடுப்பதற்காக கொண்டுவரப்படவிருக்கும் சட்டமூலத்தின் ஊடாக தண்டப்பணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பொட்டம் ட்ரோலிங் முறைக்கு இடமளிக்கப்போவதில்லை.

 

இதற்கு காலஅவகாசமொன்று கேட்டுள்ளனர். இது விடயத்தில் யுத்தமொன்றை உருவாக்க முடியாது. இவ்வருடத்துக்குள் இதனைத் தீர்ப்பதற்கே எதிர்பார்த்துள்ளோம். இலங்கை கடற்பரப்புக்குள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது பற்றியோ அல்லது குறிப்பிட்ட பகுதிக்குள் மீன்பிடிப்பதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை. எவ்வாறான தீர்மானம் எடுப்பதாயினும் வடபகுதி மீனவர்களுடன் கலந்துரையாடி எடுக்கப்படும் என்பதுடன், இதுபோன்ற பல்வேறு யோசனைகள் இரண்டு தரப்பினாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. பல தரப்பினரால் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதும் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

 

எதுவாக இருந்தாலும் பொட்டம் ட்ரோலிங் முறைமையை முற்றாக ஒழிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பதே கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது. இவ்விவகாரத்தை மேலும் இழுத்தடிக்க முடியாது என்பதால் இவ்வருட இறுதிக்குள் முடிவொன்றை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

 

அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் படகுகளை நாம் விடுவிப்பதில்லை. மீனவர்களை விடுவித்தாலும் படகுகள் மீள வழங்கப்படுவதில்லை. 30௪0 படகுகள் அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளன. மீன்பிடி படகுகளை மீள வழங்க முடியுமா எனக் கேட்டுள்ளனர் எனினும், வழங்க முடியாது என கூறியுள்ளோம். இப்பிரச்சினையைத் தீர்ப்பதாயின் வடக்கில் உள்ள மீனவர்களின் விருப்பமும் கேட்கப்படும்.

 

ஆரம்பத்தில் இரு தரப்பு மீனவர்களும் எல்லைகளைத் தாண்டிச் சென்று மீன்பிடித்திருந்தனர். எனினும் நவீன தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரான மீன்பிடி அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் சம்பிரதாய பூர்வமான மீன்பிடி பிரதேசம் இருந்தது. எனினும் யுத்தம் முடிந்த பின்னர் வியாபார ரீதியாக வர்த்தக நோக்கத்தில் ட்ரோலர்களை கொள்வனவு செய்து அவற்றைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதற்கு சம்பிரதாயபூர்வ மீன்பிடி எனக் கூற முடியாது. இதற்கு அனுமதிக்கவும் முடியாது என்றார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply