புலிகளின் மேலும் 4 படையணிகளின் நான்கு தலைவர்களும் உயிரிழப்பு
புதுக்குடியிருப்பு பிரதேசத்தை புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையின் போது படையினர் நடத்திய தாக்குதல்களில் புலிகளின் மேலும் நான்கு படையணிகளைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.சிலம்பரசன், கோபால், மோகனா மற்றும் கீர்த்தி ஆகிய நான்கு தலைவர்களே கொல்லப்பட்டுள்ளதுடன் அன்பு மற்றும் அஸ்மி ஆகிய இரு தலைவர்களே படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் நடத்திய தேடுதல்களில் மாத்திரம் கொல்லப்பட்ட புலிகளின் 284 சடலங்களையும், பெருந் தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, புலிகளின் பிடியிலிருந்த சுமார் 15 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை படையினர் முற்றாக விடுவித்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ள 20 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட பிரதேசம் மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். புலிகளின் மேலும் நான்கு முக்கிய படையணிகளைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளமையும், மற்றுமிரு தலைவர்கள் படுகாயமடைந்துள்ளமையும் நேற்றைய தினம் படைத்தரப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட நால்வரில் புலிகளின் ‘ராதா’ படையணியின் தலைவர் சிலம்பரசன், புலிகளின் பீரங்கி படைப்பிரிவின் தலைவர் கோபால், புலிகளின் ‘சோதியா’ படைப்பிரிவின் சிரேஷ்ட தலைவர் மோகனா மற்றும் புலிகளின் ‘ஜயந்தன’ படையணியின் தலைவர் கீர்த்தி ஆகியோர் அடங்குவர்.
இதுதவிர புலிகளின் ‘ராதா’ படையணியின் பிரதித் தலைவர் அன்பு மற்றும் கண்ணிவெடி பிரிவின் பொறுப்பாளர் அஸ்மி ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
படையினரின் வெற்றிகரமான படை நடவடிக்கைகளின் மூலம் நாளுக்கு நாள் தமது முழுக் கட்டுப்பாடுகளையும் இழந்த புலிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தற்பொழுது தமது முக்கிய தலைவர்களையும் இழந்து வருவதாக தெரிவித்தார். இது அவர்களது தோல்வியை எடுத்துக் காட்டுவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் பொது மக்களின் நலனை கருத்திக் கொண்டு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் ஊடுருவிய புலிகள் அங்குள்ள அப்பாவி பொது மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்திவரும் நிலையில் புலிகளின் பிடியிலிருந்து சிவிலியன்களை மிகவும் பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தை முற்றாகப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தப் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரி- 56 ரக துப்பாக்கிகள்௨76, ரி. 86 ரகத் துப்பாக்கி- 11, தொலைத் தொடர்பு கருவி- 15, இயந்திரத் துப்பாக்கிகள்-06, எம். 16 ரக துப்பாக்கிகள்-02, 5. 56 ரக துப்பாக்கி- 2, விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் -05, 130 மி. மீ. ரக மோட்டார் ௧, ஏ. கே. 47- 01, கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply