சிங்கள ஆசிரிய நியமனத்தில் எனக்கு உடன்பாடில்லை :முதலமைச்சர் நசீர் அகமட்

NASIRகிழக்கு மாகாண சபை மூலம் 60 பேர் சிங்கள மொழி மூல பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. எமது மாகாண சபையினூடாக தொழில் வாய்ப்பை வழங்கும்போது சமூகங்களுக்கிடையே சமநிலை பேணப்பட வேண்டும் என்ற சித்தாந்தத்தில் நான் உறுதியாய் இருக்கின்றேன் என கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்தார்.

அண்மையில் கிழக்கு மாகாண பட்டதாரிகளது ஆசிரிய நியமனம் சம்பந்தமான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு பல விஷங்களை தெளிவுபடுத்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கூறுகையில், பட்டதாரிகள் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை விசாலமானது. வாழ வேண்டிய வயதில் வருமானமின்றி இருப்பது வேதனையானது. இதை நான் நன்கு உணர்கிறேன்.

இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த வருடத்திலிருந்து முயற்சித்து வந்தேன். இதன் பயனாக 355 பேருக்கு பட்டதாரி ஆசிரிய நியமனங்கள் வழங்க முடிவு எட்டப்பட்டது. இதில் தமிழ், முஸ்லீம், சிங்களம் என்ற மூன்றினத்தவரும் உள்வாங்கப்பட்டிருந்தனர். அவ்வேளையில் இவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான நிதி வசதியும் எமது மாகாண சபையில் இருந்தது.

அவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால் 2016 ஜனவரியில் அவர்களை எமது மத்திய அரச தமது ஆளணிக்குள் உள்வாங்கியிருக்கும். மாகாணசபைக்கான நிதிச்சுமையை மத்திய அரச பொறுப்பேற்றிருக்கும். இந்த நிலையில் கிழக்கின் ஆளுநர் முந்திக்கொண்டு 60 சிங்கள மொழிமூல பட்டதாரிகளுக்கு மட்டும் நியமனம் வழங்க ஏற்பாடுகளை பூர்த்தி செய்து நியமனமும் வழங்கப்பட்டு விட்டது. இப்பட்டியலில் உள்ள ஏனைய தமிழ், முஸ்லீம் பட்டதாரிகள் ஓரம் கட்டப்பட்டு விட்டார்கள்.

மிகுதியானவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான வாய்ப்பு இப்போது இல்லை. சபையினுடைய நிதி நிலைமை அதற்கு இடமளிக்கவில்லை. கடந்தவருடத்தில் இருந்த நிலை வேறு, இப்போதைய நிலைவேறு, இவ்விஷயத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வெறு இறுக்கங்கள் காணப்படுகின்றன. அவைகளை தாண்டுவதற்கான எனது முயற்சிகளுக்கு பலிதம் கிடைக்கவில்லை. இவ்விஷயத்தில் நான் சோர்ந்து போகவோ, தளர்ந்துபோகவோ இல்லை. எனது முயற்சி தொடர்கிறது.

ஆளுநரின் சில அவசர செயற்பாடுகளால் கிழக்கு மாகாணசபையின் நடவடிக்கையினூடாக எதிர்பார்க்கப்பட்ட கருமங்கள் முற்றுப்பெறுவதில்லை. இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு மாகாணசபை முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இவ் இடர்பாடுகளுக்கான காரணங்களை கிழக்கு மக்கள் சரிவர புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.

பலர், வடக்குமாகாணசபையில்தான் பிரச்சினை என்று கூறிக்கொள்கிறார்கள். அது கிழக்கிற்கும் தொற்றிக் கொண்டு விட்டதாக உணர்கிறேன். மகாணசபைகளை ஆளுநர்கள் தங்களது இலிகிதர்களாக நினைப்பது தவறு, அவர்கள் தங்களது மனோநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் அப்போதுதான் மகாணசபைகள் தங்களது செயற்பாடுகளினூடாக சிறந்த சேவையை வழங்க முடியும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply