ஐரோப்பிய யூனியனில் நீடிக்கும் விவகாரம்: மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையை இங்கிலாந்து நிராகரித்தது

eropa unionஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கலாமா? அதிலிருந்து வெளியேறலாமா? என்பது குறித்து கடந்த மாதம் 23-ந்தேதி அந்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெளியேறலாம் என்று 52 சதவீதம் பேரும், நீடிக்கலாம் என 48 சதவீதம் பேரும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு இங்கிலாந்து அரசு முடிவு செய்தது.

 

என்றபோதிலும், பொதுவாக்கெடுப்பின் முடிவை இங்கிலாந்து அரசியல்வாதிகள் சிலரால் ஷீரணிக்க முடியவில்லை.

 

இவர்கள், சில அமைப்புகளுடன் இணைந்து ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது தொடர்பாக புதிய பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பதிவான மொத்த ஓட்டுகளில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு தேவையான 60 சதவீத ஓட்டு கிடைக்காததால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும் வகையில் புதிய சட்டவிதியை இணைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த இவர்கள் இணையதளம் வாயிலாக இதற்காக 41 லட்சம் பேரிடம் ஆதரவும் திரட்டினர்.

 

எனினும், புதிய வாக்கெடுப்பு கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்து விட்டது.

 

இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 

இங்கிலாந்து பாராளுமன்றம் வகுத்த சட்ட விதிமுறைப்படிதான் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனவே, இந்த சட்டத்தை மதிக்கவேண்டும். குறைவான சதவீத மக்களே ஓட்டுப்போட்டனர் என்பதை காரணம் காட்டி மீண்டும் தொடக்க நிலைக்கு செல்லக்கூடாது. அரசும், பிரதமரும் இது ஒரு தலைமுறையின் ஓட்டு என்பதால் அந்த தீர்ப்பு மதிக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

 

பொதுவாக்கெடுப்பின்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு நாம் தயாராகவேண்டும். இதில், இங்கிலாந்து மக்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த பலன்கள் கிடைப்பதற்கு அரசு உறுதி கொண்டு உள்ளது.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply