உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தீவிரம்: கட்சிக்கு எதிராக செயல்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது ஜெயலலிதா நடவடிக்கை

jeyaதமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் அதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டன.குறிப்பாக, ஆளும் கட்சியான அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு புது வியூகம் வகுத்து வருகிறார். அந்த வியூகத்தை கட்சியில் உள்ள 1½ கோடி தொண்டர்கள் மத்தியில் செயல்படுத்த தொடங்கியுள்ளார்.

அதாவது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவோ 190 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்.

ஆட்சியை பிடித்தாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணையை அவர் தொடங்கினார். சட்டமன்ற தேர்தலின்போது, அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட்ட கட்சி நிர்வாகிகள் யார்?, எதிராக செயல்பட்டவர்கள் யார்? என்பதை விசாரித்து பட்டியல் தயாரித்தார்.

அதன்படி, அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட கட்சி நிர்வாகிகள் மீது முதல்-அமைச்சர் ஜெயலலிதா சாட்டையை சுழற்ற தொடங்கினார். பல அ.தி.மு.க. நிர்வாகிகளின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன, சிலர் கட்சியை விட்டே நீக்கப்பட்டனர். தொடர்ந்து பலரது மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்தே கட்சியில் இந்த களையெடுப்பு நடக்கிறது.

சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் உள்ளாட்சி தேர்தல் குறித்தே விவாதிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று தெரிவித்ததுடன், சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட நிர்வாகிகளையும் அவர் எச்சரித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் சுமார் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பதவி இடங்கள் உள்ளன. ஆனால், கட்சியில் உள்ள தொண்டர்கள் அனைவருக்கும் இந்த பதவியை வழங்க முடியாது என்பதால், கட்சி தலைமை யாரை வேட்பாளராக அடையாளம் காட்டுகிறதோ அவர்களை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அன்பு கட்டளையிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அ.தி.மு.க.வினர் இப்போதே மும்முரமாக ஈடுபடத் தொடங்கி விட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply