யுனெஸ்கோ 2009ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகைச் சுதந்திர விருது:லசந்தவுக்கு

படுகொலை செய்யப்பட்ட ‘சண்டே லீடர்’ பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவுக்கு ஐ.நாவின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, 2009ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகைச் சுதந்திர விருதை வழங்கியுள்ளது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் கொய்சிரோ மற்சூறா இவ்விருதுக்கு லசந்த விக்ரமதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். போருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த லசந்த பரஸ்பர புரிந்துணர்வு, இணக்கப்பாடு, கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய முக்கிய பண்புகளை தனது ஊடகவியலில் கடைப்பிடித்ததற்காக இவ்விருது அவருக்குப் பொருத்தமானது என்றும் கொய்சிரோ மற்சூறா தெரிவித்துள்ளார்.

அவர் தனக்கு ஆபத்துள்ளதை உணர்ந்தும் தனது மரணம் வரை உண்மையைப் பேசியதால் இவ்விருதுக்கு இவரது பெயர் ஏகமனதாக ஏற்கப்பட்டதாக தேர்வாளர் குழுவின் தலைவர் ஜோ தொலோலோ தெரிவித்தார். முழு உலகத்தையும் சேர்ந்த 14 பேரைக் கொண்ட யூரிகள் சபையே ஏகமனதாக லசந்தவைத் தெரிவு செய்துள்ளது. அவர் எழுதிய ஆசிரிய தலையங்கம், அவர் ஜனவரி 8ஆம் திகதி கொல்லப்பட்ட மூன்று நாட்களின் பின்னரே ஜனவரி 11ஆம் திகதி வெளியானதாகவும் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் அவர் ஊடக சுதந்திரத்திற்காகத் தன்னை அர்ப்பணித்ததுடன் அதன் அடிப்படையே கொலைக்கான காரணமாக இருந்தது. லசந்த விக்ரமதுங்க பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இவ்விருது மே மாதம் மூன்றாம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று கட்டாரின் தலைநகரான டோகாவில் வைத்து வழங்கப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply