யாழ் பல்கலை சம்பவத்தை பயன்படுத்தி யுத்தத்தை தூண்ட இடமளியாதீர் : அநுரகுமார

ANURAயாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை பயன்படுத்தி நாட்டில் மீண்டும் இன மோதல்கள் மற்றும் யுத்தமொன்றை தூண்டிவிட இடமளிக்கக் கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இந்த சம்பவம் இனவாதிகளுக்கு ஊக்கமருந்தாக அமைந்துள்ள போதிலும், இனவாதத்தை தூண்ட பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து தடுக்க முன்வர வேண்டும் என்றும் அநுரகுமார அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விஞ்ஞான பீட முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வைபவத்தில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையில் நிகழ்ந்த மோதல்கள் குறித்த தகவல்கள் நாடு முழுவதும் பரவிய நிலையில் பதற்றமான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நட்டில் மீண்டும் ஒரு இன மோதல்கள் வெடிக்கலாமா என்ற அச்சமும் சில தரப்பினர் மத்தியில் எழுந்துள்ள நிலையில் இனவாதம் காரணமாக இடம்பெற்ற யுத்தத்தால் போதுமான அளவிற்கு அழிவை சந்தித்துவிட்டதால் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு எவரும் இடமளிக்கக்கூடாது என கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜே.வி.பி யின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ”யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறக்கூடாத மிகவும் துரதிஸ்டவசமான மோதல் சம்பவமொன்று ஏற்பட்டது.

இவ்வாறான இனவாத மோதல் சம்பவங்கள் பல்கலைக்கழகத்தில் மாத்திரமல்ல எந்தவொரு கிராமத்திலும் ஏற்படக்கூடாது. இந்த சம்பவம் குறிப்பாக இனவாதத்தை பயன்படுத்தி தமது அரசியலை நடாத்திவரும் தரப்புக்கு ஊக்க மருந்தாக அமையும்.

இவ்வாறான இனவாத மோதல்கள் காரணமாக தேவைக்கு அதிகமாகவே பேரழிவை சந்தித்த தேசம் எமது நாடு. எமது நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்துள்ளது.

எமது நாட்டில் வாழும் சிங்களம், தமிழ், முஸ்லீம் உட்பட அனைத்து இன மக்களும் போதுமான அளவிற்கு கண்களிலிருந்து கண்ணீர் சிந்திவிட்டனர். இனவாத மற்றும் யுத்த மோதல்கள் காரணமாக எண்ண முடியாத அளவிற்கு ஏராளமான மக்கள் பலியாகிவிட்டனர்.

சொத்துக்களை இழந்துவிட்டனர். அதனால் எமது நாட்டில் மீண்டும் ஒரு இனவாத யுத்தத்திற்கோ, அல்லது இன வன்முறைக்கோ இடமளித்துவிடக் கூடாது. யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி நாட்டில் இன மோதல்களை தூண்டிவிடுவதற்கு இனவாதிகளுக்கு சந்தர்ப்பத்தை கொடுக்கக்கூடாது.

அதனால் இவ்வாறான மோதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு எமது மாணவர் அமைப்பிற்கும், ஏனைய மாணவர் அமைப்புகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். அதேவேளை இந்தப் பிரச்சனையை நாட்டின் பிரஜைகளாகவே நாம் பார்க்க வேண்டும். மீண்டும் எமக்கு பேரழிவை ஏற்படுத்தும் யுத்தம் வேண்டுமா? இன மோதல்கள் தேவையா? என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

அதற்கமைய சிங்களவர்களாகவோ, தமிழர்களாகவோ, முஸ்லீம்களாகவோ இருந்தாலும் மீண்டும் யுத்தத்திற்கு இடமளிக்காது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply