சுதந்திர விசாரணைக்கு மூவரடங்கிய கல்விமான்கள் குழு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூவரடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் உள்ள உயர் பதவிவகிக்கும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதுடன், ஏனைய இருவரும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழர்களாவர். இந்தக் குழுவினர் நடத்தும் விசாரணைகளுக்கு அமைய மோதல்களைத் தூண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.
நாளை முதல் படிப்படியாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதுடன், நாளை மருத்துவ பீடத்தின் சித்தமருத்துவ பிரிவின் பயிற்சிகளையும், விஞ்ஞானபீடம் மற்றும் மருத்துவ பீடங்களின் பரீட்சைகளையும் ஆரம்பிக்கவிருப்பதாக அவர் கூறினார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்றையதினம் துணைவேந்தரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சகல பீடங்களின் பீடாதிபதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்வாறானதொரு சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தமக்கு உறுதிமொழி வழங்கியிருப்பதாகவும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இரு மாணவக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்றது சிறியதொரு சம்பவமாகும். இதனை இனரீதியான மோதலாக சித்தரிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. இதுபோன்ற சிறிய சம்பவங்கள் கடந்த காலத்திலும் இடம்பெற்றுள்ளன. சம்பவ தினத்தன்று ஒரு மணித்தியாலத்துக்குள் நிலைமையை சுமூகமாக்க முடிந்தது.
இருந்தபோதும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே தற்காலிகமாக பல்கலைக்கழகத்தை மூட தீர்மானித்திருந்தோம்.
நாளையதினம் (20) மருத்துவபீடத்தின் பரீட்சைகள் மற்றும் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. படிப்படியாக ஏனைய பீடங்களின் செயற்பாடுகளை தொடங்கவிருக்கின்றோம். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் எதுவித அச்சமும் இன்றி வழமைபோல வந்து தமது கல்விச் செயற்பாடுகளைத் தொடரமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கான சூழல் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் கடப்பாடு தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காக சகல பீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து வேலைத்திட்டங்களை வகுத்திருப்பதாகவும் கூறினார்.
மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளையும் அவர்களின் ஆலோசகர்களையும் நாம் அழைத்துச் சந்தித்திருந்தோம். எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் வீடுகளுக்குச் சென்ற பின்னர் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் படித்து மீண்டும் வருவதற்கு அஞ்சலாம். எனினும், உயர்கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வடமாகாண ஆளுநர் என சகல தரப்பினரும் இந்தச் சம்பவம் குறித்து அவதானமாக இருக்கின்றனர்.
விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் குழுவினர் மிகவும் கண்டிப்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துவார்கள். அவர்களின் பரிந்துரைக்கு அமைய மோதலைத் தூண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply