அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் கடற்படை அதிகாரி – ஒபாமா கண்டனம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்துக்கு உட்பட்ட பேட்டன் ரவுஜ் பகுதியில் நேற்று முன்தினம் முகமூடி அணிந்து வந்த ஒருவர் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீஸ் தலைமையகத்துக்கு அருகே நடந்த இந்த சம்பவத்தில் 3 போலீசார் கொல்லப்பட்டனர், சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் போது அந்த மர்ம நபரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் மேலும் 2 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் ஒருவர் மட்டுமே இந்த தாக்குதலை நடத்தியதாக பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அந்த நபர், அமெரிக்க கடற்படையில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரி என தெரிய வந்தது. கருப்பினத்தவரான அவர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. எனினும் அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீது போலீசார் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் அவர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை கண்டித்துள்ள ஜனாதிபதி ஒபாமா, இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என வர்ணித்துள்ளார். இந்த நேரத்தில் அரசியல் தலைவர்களும், குடிமக்களும் ஆத்திரமூட்டும் வார்த்தைகளை வெளியிட்டு பிரிவினையை ஏற்படுத்தாமல், ஒற்றுமையை பேணுவதற்கான வழிகளை ஆராய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply