பாராளுமன்ற முற்றுகை சட்டவிரோதமானது : லண்டன் மாநகரக் காவல்துறை
வன்னியில் உடனடி யுத்த நிறுத்தமொன்றை வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன் நேற்று (ஏப். 6) மதியம் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கியவர்கள், சற்று பிற்பகலாக நாடாளுமன்ற சதுக்கத்தை அண்டியுள்ள வெஸ்ட்மின்ஸ்ரர் பாலத்தில் போக்குவரத்தை இடைமறித்து குழுமியதால் அந்தப்பகுதி முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸின் விசேட கலகம் அடக்கும் பிரிவு களத்தில் இறங்கியது.
வெஸ்ட்மின்ஸ்ரர் பாலத்தை ஆக்கிரமித்து இருந்த ஆர்ப்பாட்டகாரர்கள் மீது பலத்தைப் பிரயோகித்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து அவர்களை நகர்த்தும் நடவடிக்கையை காவற்துறையினர் செய்துள்ளதாக அறிய முடிகிறது.
இச்சம்பவத்தில் சிலர் காயமடைந்து மருத்துவ சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் மீது வன்முறையை பிரயோகிக்க முயன்றமை போன்ற வெவ்வேறு குற்றச்சாட்டின் பெயரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகுதி ஆர்ப்பாட்டக்காரர்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் இன்னும் சிலர் தொடர்ந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் உள்ள ஒரு புல்வெளிப்பகுதியில் கூடி நிற்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டன் மாநகர காவல்துறையிடம் முறையான முன்னனுமதி பெறப்படாத சட்டத்துக்குப் புறம்பான `ஆர்ப்பாட்டம்` இதுவென ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸ்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியான முறையில் கலைந்து போகுமாறு பணித்ததாகவும் இருப்பினும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 20 மணித்தியாலங்கள் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றும் இன்றும் தலா ஒருவர் தேம்ஸ் நதிக்குள் பாய்ந்ததாகவும் அவர்கள் இருவரையும் தாம் பத்திரமாக மீட்டதாகவும் தெரிவித்த அவர் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பின் கொடிகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் அக்கொடிகளை பொது இடங்களில் பார்வைப்படுத்துவது பிரித்தானிய சட்டங்களை மீறும் பாரதூரமான குற்றச் செயலெனவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply