29 பேருடன் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம்: ராணுவ மந்திரி சென்னை விரைகிறார்
சென்னையில் இருந்து நேற்று காலை அந்தமான் நோக்கி 29 பேருடன் புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘ஏ.என்.-32’ ரக விமானம் வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு மேலே பறந்தபோது திடீரென மாயமானது. விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருகிறதா என்பதை கண்டறிய, நீர்மூழ்கி கப்பலும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விமானம் காலை 11.30 மணியளவில் அந்தமானின் போர்ட் பிளைர் நகரை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
விமானம் புறப்பட்ட சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான அவ்விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் திசைமாறிச் சென்று விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்திய விமானப்படையின் 5 விமானங்கள் மற்றும் கடலோர காவல்படையின் 4 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் மூலம் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக கடலோர காவல் படையும் இப்பணியில் இணைந்துள்ளது.
இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிக்கர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply