திருமலை கடலில் துருக்கி இரசாயன கப்பலில் இருந்து சல்பூரிக் அமிலம் கசிவு கடல்நீர் பாதிப்பு

திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக திருகோணமலை நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள துருக்கி நாட்டுக் கப்பலையும், அதிலுள்ளவர்களையும் காப்பாற்றும் அவசர பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ன தெரிவித்தார்.சல்பூரிக் அமிலத்தை ஏற்றிக் கொண்டு சென்ற துருக்கி நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.ரி. கிரேன்ட்பா’(ணிஹி மிரன்னீப) என்ற கப்பலே திருமலை துறைமுகத்திற்கு அப்பாலுள்ள நடுக்கடலில் வைத்து கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சல்பூரிக் அமிலத்தினால் இலங்கையின் கடற்பரப்பிலும், கரையோர பிரதேசத்திலும் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் அந்தக் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளை கடற்படையினர் அவசரமாக மேற்கொண்டு வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில், சல்பூரிக் அமிலம் இரசாயனத்தை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் மற்றுமொரு துறைமுகமான காக்கிநாடா நோக்கி கடந்த 2ம் திகதி இந்தக் கப்பல் பயணத்தை தொடங்கியுள்ளது.

அந்தக் கப்பலில் சரக்குகளை ஏற்றக்கூடிய அளவைவிட மேலதிகமாகவும் சரக்குகள் இருந்துள்ளன. இந்தக் கப்பலில் சல்பூரிக் அமிலம் வைக்கப்பட்டிருந்த தாங்கிகளில் கசிவு ஏற்பட்டு அது கப்பலின் ஸ்திர சமநிலை பேணுவதற்காக வைக்கப்பட் டுள்ள தாங்கிப் பிரதேசத்திற்குள் படிய ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து அந்தக் கப்பலிலிருந்து உதவிக்காக இலங்கை கடற்படைக்கு அவசரத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியிலுள்ள மீட்பு ஒத்துழைப்பு மையத்தின் ஊடாக இந்த தகவல்களை பெற்றுக்கொண்ட இலங்கை கடற்படையிர் இந்தக் கப்பல் சட்டபூர்வமான ஒரு சரக்குக் கப்பல் என்பதை ஊர்ஜிதம் செய்த பின்னர் அவசர மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சல்பூரிக் அமில கசிவினால் இந்தக் கப்பல் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கப்பலின் ஊழியர்கள் உடனடியாக அதிலிருந்து கடற்படையினரால் அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர்.

கப்பலுக்குள் பிரவேசித்த இலங்கை கடற்படையினர் அதன் தாங்கிகளை பரிசோதித்தபோது அதில் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளமையை உறுதி செய்துள்ளனர்.

இந்தக் கப்பலிலுள்ள சல்பூரிக் அமிலம் இலங்கையின் கடற்பரப்பிலும், கரையோர பிரதேசத்திலும் பாரிய சுற்றாடல் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தக் கப்பலை தற்பொழுது மேலும் ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்வதற்கான அவசர நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வதற்கான வசதிகளை வழங்குவதில் கப்பலின் முகவர்களும் அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கத்தின் ஊடாக துருக்கிக்கு கடற்படையினர் அறிவித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply